மார்ச் மாதம் நடுவிலிருந்து வாரத்துக்கு சுமார் 1.3 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பு மருந்துகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட இருப்பதாக பைஸர் மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பைஸர் நிறுவனம் தரப்பில், “மார்ச் மாதத்தின் நடுவே வாரத்திற்கு சுமார் 1 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பு மருந்துகளை அமெரிக்காவுக்கு அனுப்ப உள்ளோம். அமெரிக்காவுக்கு இதுவரை 40 மில்லியன் கரோனா தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2021ஆம் ஆண்டில் 2 பில்லியன் கரோனா தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்ய இருக்கிறோம் என்று பைஸர் மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்றுக்கு எதிராக அதிக எதிர்வினையாற்றும் தன்மை கொண்ட காரணத்தால் பைஸர் கரோனா தடுப்பு மருந்து பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் உள்ளன.
அமெரிக்காவில் இதுவரை கரோனாவுக்கு 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். 2 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் கரோனா உயிரிழப்பு அதிகரித்துள்ளதை அடுத்து, அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார். அடுத்த 5 நாட்களுக்கு அமெரிக்க தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்காவில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஜோ பைடன் தலைமமையிலான அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.