புதுடில்லி:எல்லைப் பிரச்னை சற்று குறைந்துள்ளதால், அண்டை நாடான சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை, மத்திய அரசு மறுத்துள்ளது.
மோதல்
இந்தியா, சீனா இடையே ஏற்பட்ட எல்லைப் பிரச்னையால், வர்த்தக ரீதியில் பல்வேறு கட்டுப் பாடுகளை, மத்திய அரசு விதித்திருந்தது. கடந்தாண்டு ஜூன் மாதத்தில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு தரப்பு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில், நம் ராணுவ வீரர்கள், 20 பேர் உயிரிழந்தனர்.இதையடுத்து, நம் அண்டை நாடுகள் அன்னிய நேரடி முதலீடு செய்வதற்கு கடும் கட்டுப்பாட்டை மத்திய அரசு விதித்தது.
‘பாதுகாப்பு பிரச்னை தொடர்பாக ஆய்வு செய்யப்பட்ட பிறகே, முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்படும்’ என, கூறப்பட்டது. லடாக் எல்லையில் இருந்து படைகளை விலக்கி கொள்ளும் நடவடிக்கைகள் சமீபத்தில் துவங்கின. எல்லையில் இருந்த பதற்றம் சற்று தணிந்துள்ள நிலையில், சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்யும், 45 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாயின.
இது குறித்து, மத்திய நிதி அமைச்சக உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:இந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை. எந்த ஒப்புதலும் தரப்படவில்லை.
அச்சுறுத்தல்
கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்ட கட்டுப்பாடுகளின்படி, பாதுகாப்பு தொடர்பான பிரச்னை, அச்சுறுத்தல் ஏதும் இல்லை என, மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் தர வேண்டும். அதன்பிறகே, அன்னிய முதலீடுகளுக்கு ஒப்புதல் தரப்படும். அதில் எந்தத் தளர்வும் செய்யப்படவில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Advertisement