ஜெர்மனி போராட்டத்தில் பாகிஸ்தான் கொடி; பா.ஜ.க. குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மறுப்பு

பெர்லின்,
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  விவசாய அமைப்புகளுடன் அரசு பலசுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.  இந்த சட்டங்களை வாபஸ் பெற்றே தீர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுரேஷ் நகுவா, ஜெர்மனி நாட்டில் இந்திய ஓவர்சீஸ் காங்கிரஸ் கட்சி (ஐ.ஓ.சி.) நடத்திய வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பாகிஸ்தான் கொடி காண்பிக்கப்பட்டது என குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.  இதுபற்றி தனது டுவிட்டரில் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
ராகுல் காந்தியின் காங்கிரஸ் கட்சி, பாகிஸ்தான் கையுறையை போட்டுள்ளது.  அவர்களில் பாகிஸ்தான் கொடியை ஏந்தியிருப்பவர் சரண் குமார்.  மற்றொருவர் ராஜ் சர்மா என நகுவா தெரிவித்து உள்ளார்.
எனினும், நகுவாவின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஜெர்மனியில் உள்ள இந்திய ஓவர்சீஸ் காங்கிரஸ் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது.  அதில், ராஜ் சர்மா உண்மையில் காங்கிரசை சேர்ந்தவர்.  ஆனால், அவர் 65 வயது முதிர்ந்த பெருமைக்குரிய இந்தியர்.  நகுவா பகிர்ந்த புகைப்படத்தில் உள்ள நபர் இளைஞர்.
இந்திய தேசிய காங்கிரசின் மதிப்பு மற்றும் விவசாயிகளின் போராட்டங்களை மட்டுப்படுத்துவதற்கான பா.ஜ.க. மற்றும் அதன் ஐ.டி. பிரிவின் முயற்சி இது.  இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த நிகழ்ச்சியை நாங்கள் நடத்தவில்லை.  எங்களுடைய உறுப்பினர்கள் யாரும் நகுவா டுவிட் செய்துள்ள புகைப்படத்தில் காணப்படவில்லை.  ஐ.ஓ.சி. ஜெர்மனியின் உறுப்பினர்கள், நம்முடைய சிறந்த தேசத்தின் மதிப்பு மற்றும் பெருமையை போற்றும் தேசப்பற்றாளர்கள் என தெரிவித்து உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.