மதுரையில் புதிய பாலங்கள் கட்டும் அக்கறையை அதிகாரிகள் பழைய பாலங்களை பராமரிப்பில் காட்டாததால் மக்கள், சிதிலமடைந்த அந்த பாலங்களில் தினமும் அச்சத்துடன் பயணிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகரில் கடந்த 5 ஆண்டுகளாகவே போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளை அடையாளம் கண்டு அதில் உயர்மட்ட மேம்பாலங்கள், பறக்கும் பாலங்கள் கட்டும் பணி நடக்கிறது.
காளவாசல் பை-பாஸ் திண்டுக்கல் செல்லும் சாலையில் ரூ.54 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டி திறக்கப்பட்டுள்ளது. அதுபோல், நத்தம் சாலையில் மதுரை-செட்டிக்குளம் இடையே 7.3 கிமீ., தொலைவிற்கு ரூ.678 கோடியில் பிரமாண்ட பறக்கும் பாலம் கட்டப்படுகிறது.
வைகை ஆற்றின் குறுக்கே அருள்தாஸ்புரம், செல்லூரில் தரைப்பாலங்களை இடித்து இரண்டு பாலங்கள் கட்டி திறக்கப்பட்டுள்ளது. அதுபோல், தற்போது குருவிக்காரன் சாலையில் வைகை ஆறு தரைப்பாலத்தை இடித்து புது பாலம் ட்டப்படுகிறது.
மேலும், வைகை ஆற்றின் குறுக்கே ஒபுளாபடித்துறையில் ரூ.23 கோடியில் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு தற்போது ஒப்புதல் வழங்கி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. வரும் 12ம் தேதி இதற்கான டெண்டர் விடப்படுகிறது.
அதுபோல், கோரிப்பாளையம், சிம்மக்கல் முதல் பெரியார் பஸ்நிலையம் வரை பறக்கும் பாலம், திருமங்கலத்தில் மேம்பாலம் உள்பட மாவட்டம் முழுவதும் உயர்மட்ட மேம்பாலங்கள், பறக்கும் பாலங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு திட்டங்கள் அறிவித்தும், நிதி ஒதுக்கி பணிகளும் நடக்கின்றன. ஆனால், பாரம்பரியமான மதுரையின் பழைய பாலங்களை பராமரிக்க உள்ளூர் அமைச்சர்களும், மாவட்ட அதிகாரிகளும் அக்கறை காட்டவில்லை பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆனந்தராஜ் கூறுகையில், ‘‘நெரிசல் மிகுந்த இடங்களில் புதிய பாலங்கள் கட்டுவது வரவேற்க வேண்டிய விஷம்தான். ஆனால், அதில்காட்டும் அக்கறையை சிறிது ஆர்வத்தை பழைய பாலங்களையும் பராமரிப்பதிலும் காட்ட வேண்டும்.
ஆனால், மிகப்பழமையான ஏ.வி.மேம்பாலம், யானைக்கல் பாலம், மதுரைக்கல்லூரி அருகே காணப்படும் மேயர் முத்து பாலம், மெஜூராகோட்ஸ் மேம்பாலம் போன்றவை பராமரிப்பு இல்லாமல் பல ஆண்டாக அதன் கீழ் பகுதிகள் சிதலமடைந்துள்ளன.
நூற்றாண்டு கண்ட ஏ.வி.மேம்பாலம் தாங்கிப்பிடிக்கும் அடித்தூன்கள் சில இடங்களில் சிதிலமடைந்துள்ளன. அதன் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய இதுவரை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. அதில் வழக்கம்போல் அனைத்து வாகனங்களும் சென்று வந்து கொண்டிருக்கின்றன.
அதுபோல், திருப்பரங்குன்றம், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், மதுரையின் மையப்பகுதியான பெரியார் நிலையத்தை அடையவதற்கு கட்டப்பட்ட மேயர் முத்து பாலம், பல சிறப்புகளைக் கொண்டது.
பழங்காநத்தம் பகுதிகளையும், பெரியார் நிலையத்தையும் இணைக்கும் வகையில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. அதன் அடியில் ராமேசுவரம் மார்க்கத்துக்கான தண்டவாளமும் செல்கிறது. இந்த பாலத்தின் அடிப்பகுதிகள் சிதிலமடைந்து காணப்படுகின்றன.
கனரக வாகனங்கள், பயணிகள் வாகனங்கள் தற்போதும் இந்தப் பாலத்தில் சென்று வருகின்றன. மக்கள் தினமும் சிதிலமடைந்த இந்த பாலத்தில் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
அதுபோல், அரசு மீனாட்சி மகளிர் கல்லூரி தொடங்கி யானைக்கல் வரையிலான பாலத்தின் அடிப்படை, சுற்றுச்சுவர் பராமரிப்பு இல்லாமல் மேம்பாலத்தின் அடிப்பகுதி கான்கிரீட் கம்பிகள் வெளியில் நீண்டுக் கொண்டு நிற்கிறது. விபரீதங்கள் ஏற்படும் முன் பழைய பாலங்கள் உறுதித்தன்மையை ஆய்வு செய்து அவற்றைப் பராமரிக்க வேண்டும், ’’ என்றார்.