முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக, பெண் எழுத்தாளர் ஜீன் காரோல் பரபரப்பு குற்றச்சாட்டை கடந்த 2019ம் ஆண்டு தெரிவித்து இருந்தார். எழுத்தாளரும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான ஜீன் காரோல்(75) டிரம்ப் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றம்சாட்டியது அப்போது சர்ச்சையானது.
தவறாக நடந்து கொண்டார் டிரம்ப்
நியூயார்க் இதழில் டிரம்ப் குறித்து காரோல் எழுதிய கட்டுரையில் கூறுகையில், ‘கடந்த 1995 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் டிரம்ப் எனக்கு நன்கு அறிமுகமானவராக இருந்தார். அவருக்கு சில ஆலோசனைகளை வழங்கி வந்தேன்.
அப்போது ஒருநாள் மன்ஹாட்டன் நகரில் உள்ள ஒரு வர்த்தக மையத்தில் நான் இருந்தபோது, அங்கு வந்த டிரம்ப் என்னிடம் தவறாக நடந்துகொண்டார். ஆனால், அந்த சம்பவத்தைக் குறித்து அப்போது நான் வெளியில் யாரிடமும் கூறவில்லை.

அந்த சம்பவம் நடந்தபோது அறையில் வேறு யாரும் இல்லை. என்னுடைய நெருங்கிய பத்திரிகை நண்பர்கள் இருவரிடம் மட்டுமே நடந்ததைக் கூறினேன். அவர்கள் காவலர்களுகளிடம் புகார் அளிக்கும்படி என்னிடம் ஆலோசனை தெரிவித்தனர். அதில் ஒரு நண்பர் நியூயார்க் காவல்துறைக்கு தகவலளிக்க முயன்றார்’ என தெரிவித்துள்ளார்.ஆனால், காரோலின் இந்த குற்றச்சாட்டை டிரம்ப் மறுத்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் தூண்டுதல்
இதுகுறித்து டிரம்ப் விடுத்த அறிக்கையில், ‘எழுத்தாளர் காரோல் புதிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அவரின் புதிய புத்தகத்தை விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக இதுபோன்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
நான் ஒருபோதும் இதுபோன்ற பெண்ணை என் வாழ்நாளில் சந்தித்தது இல்லை. எழுத்தாளர் காரோலின் குற்றச்சாட்டுக்கு பின்னணியில் ஜனநாயகக் கட்சியின் தூண்டுதல் இருக்கிறது. இது போலியான செய்தி. என் மீதான குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என்றார்.
தற்போது காரோல் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தை நாடியுள்ளார். அவரது வழக்கறிஞர்கள் இதனை விசாரித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற டிரம்ப், கடும் மன உளைச்சலில் உள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு அவருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement