'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்களை வாங்க… வந்து பாருங்க! நோட்டீஸ் அச்சிட்டு அழைப்பு!

கோவை:கோவையில், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் மேம்படுத்திய குளங்கள், வரும், 27ல், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படுகிறது. நடைபெற்று முடிந்துள்ள பணிகளை பார்வையிடுமாறு, மாநகராட்சி பகுதி முழுவதும், வீடு வீடாக நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறது.
மத்திய – மாநில அரசுகளின் நிதியுதவியுடன், ரூ.998 கோடியில், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில், கோவையில் பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில், ஒன்பது குளங்களில், ரூ.377.54 கோடி மதிப்பீட்டில், பணிகள் நடந்து வருகின்றன.மறுசீரமைப்பு மற்றும் புனரமைக்கப்பட்ட, உக்கடம் பெரிய குளத்தின் ஒரு பகுதி, வாலாங்குளம் இணைப்பு சாலை, முத்தண்ணன் குளம் மற்றும் நரசாம்பதி குளங்களின் ஒரு பகுதியை, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, வரும், 27ல் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி திறந்து வைக்கிறார்.மேற்கு மண்டலம், 23 மற்றும் 24வது வார்டுகளில் மட்டும், ‘பைலட்’ திட்டமாக, 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் பணியை, துவக்கி வைக்கிறார்.இதுதவிர, திவான்பகதுார் சாலையில் (டி.பி.ரோடு) ரூ.24.71 கோடியில் உருவாக்கியுள்ள மாதிரி சாலையையும் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கிறார்.
இந்நிகழ்வு, நாளை (25ம் தேதி) மாலை, 6:00 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியுள்ளதால், 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.’ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் புனரமைக்கப்பட்டுள்ள, குளங்களின் அழகை பொதுமக்கள் நேரில் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக, மாநகராட்சி பகுதி முழுவதும், வீடு வீடாகச் சென்று, நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறது.
இது யார் வேலை!
வீடு, வீடாக வினியோகிக்கப்படும் நோட்டீசில், மாநகராட்சி ‘லோகோ’வை மட்டும் அச்சிட்டு, இப்பணிகளை தமிழக அரசு செய்திருப்பது போல், வாசகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் மத்திய அரசின் நிதியில் செயல்படுத்துவது; ‘ஸ்மார்ட் சிட்டி’ லோகோ அச்சிடாதது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.