காத்மாண்டு:நேபாள பார்லிமென்ட்டை கலைத்து, ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. 13 நாட்களுக்குள், பார்லி., கூட்டத்தை கூட்டும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நம் அண்டை நாடான, நேபாளத்தின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள், அதிகார மோதல் வெடித்தது. பிரதமர் கே.பி.சர்மா ஒலி மற்றும் மூத்த தலைவர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டது.கட்சிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தி, ஆட்சியை கைப்பற்ற முயல்வதாக, சர்மா ஒலி குற்றம்சாட்டினார்.இதையடுத்து, 275 உறுப்பினர்கள் அடங்கிய கீழ் சபையை கலைக்க, ஜனாதிபதி பித்யா தேவ் பண்டாரியிடம் பரிந்துரை செய்தார்.
இதன் அடிப்படையில், நேபாள பார்லி., கடந்த ஆண்டு டிசம்பரில் கலைக்கப்பட்டது. மறு தேர்தல் நடத்தும் முயற்சியில், சர்மா ஒலி ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், ஆட்சி கலைப்பை ரத்து செய்யக் கோரி, கம்யூ., தலைமை கொறடா தேவ் பிரசாத் குருங் உட்பட, 13 பேர், அந் நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு, நேபாள உச்ச நீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, பார்லிமென்ட் கலைப்பு உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர். 13 நாட்களுக்குள் பார்லி.,யின் கீழ் சபையை கூட்டும்படி, உத்தரவிட்டனர்.
Advertisement