பஸ்களில் கேமரா மூலம் விதிமீறல்களை கண்காணிக்க முடிவு| Dinamalar

பெங்களூரு : போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்டுப்பிடிக்க, பி.எம்.டி.சி., புதிய திட்டம் வகுத்துள்ளது. பஸ்களில், இரண்டு கேமராக்களை பொருத்தி, விதிமீறல்களை கண்காணிக்க முடிவு செய்துள்ளது.

பெங்களூரில், போக்குவரத்து விதிமுறைகளை அலட்சியப்படுத்தும், வாகன பயணியரின் எண்ணிக்கை அதிகம். இவர்களை கண்டுப்பிடித்து, போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலிக்கின்றனர்.அபராத தொகையில், பி.எம்.டி.சி., எனும், பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கும் பங்குள்ளது. எனவே, போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரை கண்டுபிடிக்க, பி.எம்.டி.சி.,யும் திட்டம் வகுத்துள்ளது.பி.எம்.டி.சி., பஸ்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். இதன் மூலம், பார்க்கிங் விதி மீறல்; போக்குவரத்து விதிமீறல்களை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

பஸ்களை அதிவேகமாக ஓட்டுவது; தவறான இடங்களில் வாகனங்களை நிறுத்துவது என, பலவிதமான விதிமீறல்களை, இந்த கேமராக்கள் பதிவு செய்யும். ஒவ்வொரு பஸ்களிலும், இரண்டு கேமராக்கள் பொருத்தப்படும்.ஒரு கேமரா, ஓட்டுனரை கண்காணிக்கும்; மற்றொன்று பெண்களின் பாதுகாப்புக்கு, உதவியாக இருக்கும். சில்க்போர்டு – வெளிவட்ட சாலைகளில் இயங்கும், 40 பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, பி.எம்.டி.சி., முடிவு செய்துள்ளது. பி.எம்.டி.சி., அதிகாரி கூறுகையில், ”சாலைகளில் பி.எம்.டி.சி., ஓட்டுனர்கள், போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கவும், கேமராக்கள் உதவியாக இருக்கும். ‘நிர்பயா’ திட்டத்தின் கீழ், கேமராக்கள் பொருத்த, அரசு நிதியுதவி வழங்கும்,” என்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.