அவரை அனுப்பியது பிஜேபி தான்.. எச்சரிக்கை விடுத்த மம்தா !

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே இருகட்டங்களாக வாக்குப்பதிவு முடிந்துள்ளது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான மம்தாவின் திரினாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையான நேரடி போட்டி உள்ளது. 

குறிப்பாக, மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு புறம் காங்கிரஸ் – இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் பீகாரில் தேர்தல் முடிவை மாற்றுவதற்கு காரணமாக இருந்த ஓவைசி கட்சி மீது விமர்சனம் எழுந்தது. ஏனெனில் அவரது கட்சி ஏற்படுத்திய தாக்கம் தான் பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கு உதவியது. 

பீகார் சட்டப்பேரவையில் நடந்த தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்ற ஏஐஎம்ஐஎம் கட்சி மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிடுகிறது. எந்த நோக்கமும் இல்லாமல் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் வேட்பாளர்களை நிறுத்தி குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியவர் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.  
 
இந்தநிலையில் மேற்குவங்க மாநிலம் கூச் நகரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மம்தா பானர்ஜி, ஒவைசியின் பெயரை குறிப்பிடாமல் கடுமையாக விமர்சி்ததார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஹைதராபாத்தில் இருந்து ஒருவர் மேற்குவங்கத்திற்கு வந்துள்ளார். அவர் பாஜகவிடம் பணம் வாங்கிக் கொண்டு வந்துள்ளார். அவரை மேற்குவங்க மக்கள் அனுமதிக்க கூடாது. 

அவர் பாஜகவின் பி டீம். பாஜக எதிர்ப்பு வாக்குகளை சிதறடி வைப்பது தான் அவரது நோக்கம். அதற்காக பாஜக ஏவி விட்ட அம்பு தான் அவர். அவரிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் கூறினார். நான் மட்டும் இந்த தேர்தலில் வென்றால் ஆட்சி அமைத்து விட முடியாது. எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் 291 தொகுதிகளிலும் இந்த வெற்றியை பெற வேண்டும்.

மீதம் உள்ள தொகுதிகளில் எங்கள் நண்பர்கள் டார்ஜிலிங் மலைப்பகுதியின் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இவை அனைத்திலும் நம் கட்சி குறைந்தது 225 முதல் 230 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இல்லையென்றால், சில துரோகிகளின் உதவியுடன் ஐந்து கோடி ரூபாய் வரை அளித்து பாஜக வேட்டையாடி விடும். எனவே, பொதுமக்கள் எங்களுக்கு அதிக அளவில் வாக்களிக்க முன்வர வேண்டும் என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

ஏற்கனவே, மம்தா பானர்ஜியும் ஓவைசியும் வார்த்தை போரில் ஈடுபட்டனர். ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியை பாஜகவின் பி டீம் என்றும், பணம் பெற்றுக்கொண்டு வாக்குகளைப் பிரிக்கப் பார்க்கிறார் என்று ஏற்கெனவே மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த அசாதுதீன் ஒவைசி பணத்தால் ஒவைசியை வாங்குவதற்கு யாரும் இல்லை, மம்தாவின் கட்சியைச் சேர்ந்தவர்கள் பலரும் பாஜக பக்கம் போய்ச் சேரும்போது அவர் அதை நினைத்து வருத்தப்பட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

newstm.in

 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.