'இன்னிலை': வ.உ.சி. பதிப்பித்த இன்னிலை! -முனைவர் ம. இராசேந்திரன்

படிப்பது கட்டாயத்தில்தான் அல்லது மற்றவரின் விருப்பத்தில்தான் எனக்குத் தொடங்கியிருக்கிறது. இது பொதுவாகப் பலருக்கும் நேர்ந்திருக்கும்தான். திருவையாறு பொது நூலகத்தில்தான் பிளேட்டோவின் ’குடியரசு’ மற்றும் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ போன்ற நூல்களின் அறிமுகம் கிடைத்தது.

அதன் பின்னர் புதுமைப்பித்தன், கு.ப.ரா., பிச்சமூர்த்தி, மெளனி, கு.அழகிரிசாமி ஆகியோர் அறிமுகமானார்கள். இப்படி அவ்வபோது சங்க இலக்கியம் முதல் சமகால இலக்கியம் வரை எதுவாயினும் படிக்க முடிகிற மனநிலை எனக்குள் வளர்ந்து வந்திருக்கிறது.

அப்படித்தான் சென்ற மாதம் நாமக்கல் சென்றிருந்தேன். நண்பர் வேலுசாமியிடம் ஒரு புத்தகம் பார்த்தேன். ‘ஸ்ரீபொய்கையார், இன்னிலை, ஸ்ரீமான் வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்கள் விருத்தியுரையுடன் தில்லையாடி த.வேதியப் பிள்ளையால் பதிக்கப் பெற்றது. சென்னை இந்தியா அச்சுக்கூடம் பிங்கல வருடம்’ என்று முதல் பதிப்பகத்தில் இருந்தது.

இன்னிலை என்பது திருக்குறள் முதலான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றெனவும், இல்லை எனவும், இரண்டு வகை கருத்துகள் தமிழறிஞர்களிடம் உண்டு. வ.உ.சி. தமிழிலக்கியத்தில் ஆர்வம் கொண்டு தேடிப்பிடித்து உரை எழுதி இன்னிலைப் பதிப்பித்திருக்கிறார். இன்னிலை 45 வெண்பாக்களில் அறம், பொருள், இன்பம் எனும் முப்பாலோடு வீட்டுப்பால் எனும் நான்காவது பாலையும் கொண்டுள்ளது. வீட்டுப்பால் இல்லியல், துறவியல், எனும் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது.

இன்னிலையோடு வேறு சில நூல்களையும் சேர்த்து இது ஒரே தொகுப்பாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஆக்கியவர் காதர் மொய்தீன் என்று பொறிக்கப்பட்டுள்ளது.

திருக்குறளுக்கு மணக்குடவர் எழுதிய உரையை அச்சிட்டுத் தமிழுலகத்திற்குத் தந்தவர் வ.உ.சி. இத்தொகுப்பில் அறத்துப்பால் இடம் பெற்றுள்ளது. இது 1917-ல் முதலில் வெளிவந்துள்ளது. அப்போது வ.உ.சி. பெரம்பூரில் இருந்திருக்கிறார். வ.உ.சி. அதைப் பிரம்பூர் என்று நூலில் குறித்துள்ளார். இந்நூல் வெளிவர தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தியச் சகோதரர்கள் பலர் உதவி செய்துள்ளனர். அவர்களின் பட்டியல் உள்ளது. அதில் முதலியார், நாயுடு, பிள்ளை, படையாட்சி, வாண்டையார், செட்டியார், மூப்பன் எனும் சாதிப் பெயர்களுடன் கூடியவர்கள் வ.உ.சி.யின் தமிழ்ப் பணிக்குச் சாதி கடந்து உதவி புரிந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

கோவை சிறையில் வ.உ.சி. அடைக்கப்பட்டிருந்த காலத்து மொழிபெயர்த்த ஜேம்ஸ் ஆலனின் ’அகமே புறம்’ என்ற நூலும் இதில் இடம் பெற்றுள்ளது. இதன் முதல் பதிப்பு 1914-ல் 1,000 பிரதிகள் அச்சாகி இரண்டாண்டுகளுக்குள் விற்று முடிந்து 1916-ல் இரண்டாம் பதிப்பு வெளிவந்துள்ளது.

வ.உ.சி.யின் முதன் மனைவி வள்ளியம்மை மறைந்தபின், வள்ளியம்மை சரித்திரம் வ.உ.சி.யின் நண்பர் சி.முத்துசாமிப்பிள்ளை என்பவரால் 216 வெண்பாக்களால் எழுதப்பட்டுள்ளது. அதற்கு வ.உ.சி. அரும்பதவுரை எழுதியிருக்கிறார். இந்நூலை இவரது இரண்டாவது மனைவியின் வற்புறுத்தலில் அச்சிட்டுள்ளார்.

இத்தொகுப்பில் முக்கியமான இன்னொரு பகுதி ‘கதாமாலிகா’ எனும் மாத இதழாகும். சென்னை வேப்பேரி ஸ்ரீகாமாட்சி விலாசப் புத்தக சாலையார் கதாமாலிகாவைத் தொடங்கியுள்ளனர்.

’வஸந்தா அல்லது வீரகேசரியின் விநோதச் செயல்கள்’ எனும் ஸ்ரீமான் எஸ்.எல்.அருணகிரிநாதன் எழுதிய துப்பறியும் நாவல் முதல் இதழில் தொடர்கதையாக வெளிவந்துள்ளது.

இனிய தமிழ் நாவல்கள் எனும் தலைப்பில் 136 நூல்களையும் சங்கீத புத்தகங்கள், ஹார்மோனியம் எனும் இசைக்கருவி விற்பனை, அண்டபிண்ட சமத்துவ விளக்கம், விபூதி விளக்கம் என்ற நூல்களையும் அறிய முடிகிறது.

திருப்புகழ் போன்று திறப்புகழ் என்றொரு நூலையும் கதாமாலிகாவில் காண முடிகிறது.

பெண்களுக்குரிய நூல்கள் எனும் தலைப்பில் சைவபாகசாஸ்திரம், இந்திய சமையல், லேடிஸ் குக்கரி, மருமக்கள் துயரம், நவரத்தின ஒப்பாரி, விசித்திர கோலம் ஆகிய நூல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், மாந்திரீகம், வைத்திய, ஜோதிட தினுசுகள், கீர்த்தனைகள், திருக்குறள் நாடகம் போன்ற நாடகங்கள் மற்றும் புராதனக் கதைகளும் தரப்பட்டுள்ளன. சட்டம் தொடர்பான நூல்கள் ’ஆக்ட் புத்தகங்கள்’ என்ற தலைப்பில் புது விவகார சிந்தாமணி, புது பெரிய உறிந்துலா சிவில்லா, நில ஆக்கிரமிப்புச் சட்டம், இந்து தேசத்து சாட்சி ஆக்ட் ஆகிய நூல்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது. அப்போதே தமிழாக்கமான நூல்கள் கதாமாலிகாவால் தெரிய வருகின்றன.

மேலும், இரதிமதன கிருங்கார ரகசியம் (ஓர் அரியமானிட மர்ம நூல்) எனும் நூலுக்கு ‘அநேக புத்தகங்களின் கருத்தை ஒருங்கே திரட்டி எளிய இனிய தமிழ் நடையில் எழுதப்பட்டிருக்கிறது. இதில் ஸ்திரி புருஷ இலஷணங்களும் அவர்கள் மர்ம ஸ்தானங்களின் அமைப்பும் நேர்மையான உபயோகங்களும் புதிய தம்பதிகளுக்கும் பழைய தம்பதிகளுக்கும் அவசியமான விஷயங்களும் தேகக்கட்டு தளர்ந்து போகாமல் எப்பொழுதும் பதினெட்டு வயதுடைய பாக்கியசாலிகள் போல் காலங்கழிக்கத் தக்க உபாயங்களும் கர்ப்போத்பத்தி, குழந்தைகளைப் பாதுகாக்கும் விதம் முதலிய அநேக அரிய விஷயங்களும் அடங்கியிருக்கின்றன. விலை ரூ.1’ என்று விளம்பரம் வந்துள்ளது.

இப்படி ஒரு புத்தகத்தின் வழியாக சுமார் 90 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தின் நிலை, தமிழின் நிலை, நூல்கள் விற்பனை,  பத்திரிகைகளின் தன்மை, மக்களின் மன நிலை ஆகியவற்றை அறிய முடிகிறது.

தமிழ் நாட்டில் ஒலைச் சுவடிகளைப் போல இப்படிப்பட்ட அரிய நூல்களையும் தேடிக் கொணர வேண்டியிருக்கிறது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.