இந்தியாவில் கொரோனா 2ம் அலை பரவுகிறது. தினமும் சுமார் ஒரு லட்சம் கொரோனா பாதிப்புகள் உறுதியாகிவருகின்றன. அதேவேளையில், இரண்டரை மாதமாக இந்தியாவில் கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டுவருகிறது. 

கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் இந்தியாவில் போடப்படுகின்றன. தடுப்பூசி இந்தியாவில் போட ஆரம்பித்த காலக்கட்டத்தில் தடுப்பூசி மீதான மக்களின் நம்பிக்கை குறைவாக இருந்தது. ஆனால் தடுப்பூசி போட ஆரம்பித்த இந்த இரண்டரை மாதங்களில் மக்களின் மனநிலையும் தடுப்பூசி மீதான நம்பிக்கையும் அதிகரித்திருக்கிறது என்பதை கருத்து கணிப்புகள் உணர்த்துகின்றன.

”லோக்கல் சர்க்கிள்ஸ்” கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தடுப்பூசி குறித்த கருத்துக்கணிப்பை நடத்திவருகிறது. ஜனவரி 16(தடுப்பூசி போட ஆரம்பித்த நாள்) வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவில், வெறும் 38% பேர் மட்டுமே நம்பிக்கையுடன் தடுப்பூசியை போட்டுக்கொள்ள விருப்பம் தெரிவித்தனர். ஆனால் ஏப்ரல் 1ம் தேதி வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில், 77% பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். தடுப்பூசி மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்திருப்பதையே இந்த சர்வே முடிவு காட்டுகிறது.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடம் பக்கவிளைவுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, 52% பேர் எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர். 10% பேர் காய்ச்சல், உடல்வலி, கையில் புண் ஆகிய பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக தெரிவித்தனர். 

13% பேர் உடல்வலி மற்றும் கையில் புண் ஆகிய பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகவும், 17% பேர் கையில் புண் மட்டும் ஏற்பட்டதாக தெரிவித்தனர். 

எந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு, 33% பேர் கோவேக்ஸின் என்றும், 25% பேர் கோவிஷீல்டு என்றும், எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்று 37% பேரும், புதிதாக வேறு ஏதேனும் தடுப்பூசி வருகிறதா என்று காத்திருப்பதாக 5% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.