தனது பணியை செவ்வணே நிறைவேற்றிவிட்டு அமைதிகொண்ட ஆத்மா! – ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா


“வணக்கத்துக்குரிய அருட்தந்தை இராயப்பு ஜோசப் அவர்களின் மறைவு தமிழினத்தின் இழப்பாகவே எல்லாருக்கும் தெரிகின்றது, இதற்கு ஒரேயொருகாரணம் இருக்கின்றது.

அவர் தைரியமான தனது மக்களுக்கான குரலை எப்போதும் காத்திரமாகவும் கம்பீரமாகவும் உலக அரங்கில் ஒலிக்க வைத்தவர்” என இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளைத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

வணக்கத்துக்குரிய அருட்தந்தை இராயப்பு ஜோசப் அவர்களின் மறைவையொட்டி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“தமிழனத்தின் நீதிக்கான குராலாக ஒலித்த பேராயரின் குரல் இனி ஒரு போதும் ஒலிக்காதே என்று வருந்த வேண்டியதில்லை. மக்களின் குரலாக நீதியின் பக்கம் நின்று ஒலிக்கக்கூடிய பலதலைமுறைகளை உருவாக்கி வைத்திருக்கின்றார்.

அவை இனி அவரின் குரலாகவே உலகில் ஒலிக்கும். தனது வாழ்நாளை இனத்தின் மேன்மைக்காவும், இருப்புக்காகவும் நிலை நிறுத்திய அவர் தனது பணியைப் பூரணப்படுத்திவிட்டார். இனி அதைத் தொடரவேண்டியது வாழ்ந்து கொண்டிருக்கும் நமது பணியாகும்.

இனவிடுதலைக்கான கருத்தியல் நிலைநிறுத்தலை தனித்துவமாக சர்வதேச அரங்கு வரைக் கொண்டு சென்று வலியுறுத்திய அவரின் துணிச்சல் இப்போதைய தலைமுறைக்கும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தலைமைகளாகவோ, பிரதிநிகளாகவோ இருக்கின்ற அனைவருக்கும் ஓர் உன்னதமான எடுத்துக்காட்டாகும்.

அதிகாரத்துக்கு முன்னால் அச்சங்கொண்டு அவர் விலகி நிற்கவில்லை. சத்தியத்தை உரைத்தார். கடைசி யுத்தம் பற்றிய அவரது சாடல்கள் சர்வதேசத்தில் ஒலித்த காத்திரமான குரலாக என்றும் வரலாற்றில் நிலைப்பெற்று நிற்கும்.

பேரமைதி கொள்ளுங்கள் ஆண்டகையே உங்களை தமிழனம் என்றும் மறக்காது நெஞ்சில் சுமக்கும்.”Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.