தரிசன டிக்கெட்டுடன் தங்கும் அறையும் முன்பதிவு செய்யலாம்… திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு

திருப்பதி:

திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று குறைகளை தெரிவித்த பக்தர்களுக்கு தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹர்ரெட்டி பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முக கவசம்

கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கி உள்ளதால், திருமலைக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம், கையுறை, சானிடைசர் உள்ளிட்டவற்றை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். இணையதளம் மூலம் திருமலையில் தங்கும் அறைகள் முன்பதிவு செய்யும் பக்தர்கள் முதலில் மத்திய விசாரணை அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்து துணை விசாரணை அலுவலத்திற்கு சென்று அறை பெற்றுக்கொள்ளும் முறை தற்போது அமலில் உள்ளது.

இதை எளிதாக்க தேவஸ்தானம் அறை முன்பதிவு செய்த பக்தர்கள் அலிபிரி சோதனை சாவடியை கடந்தவுடன் குறுங்தகவல் மூலம் அவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய துணை விசாரணை அலுவலக எண்கள் அவர்களின் அலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும்.

பக்தர்கள் நேரடியாக அந்த அலுவலகத்திற்கு சென்று தங்கள் அறையை பெற்றுக்கொள்ளலாம். இம்முறை இன்னும் 10 நாள்களில் அமலுக்கு வர உள்ளது.

மேலும் இணையதளம் வாயிலாக விரைவு தரிசன டிக்கெட்(ரூ.300) முன்பதிவு செய்யும் பக்தர்கள் அதே பக்கத்தில் தங்கும் அறைகளையும் முன்பதிவு செய்து கொள்ளும் விதம் இணையதளத்தில் சில மாற்றங்களை தேவஸ்தானம் செய்ய உள்ளது. விரைவில் இந்த வசதியும் அமலில் கொண்டு வரப்படும்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மீது சமூக வளைதளங்களில் தவறான குற்றச்சாட்டுகளை எழுப்புபவர்கள் மீதும், அவதூறு பரப்புபவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.