தேர்தல் திருவிழாவில் கொண்டாடப்படும் வேட்பாளர்கள் வணங்கப்படும் வாக்காளர்கள்

* திண்டாட்டத்தில் அலுவலர்கள்மன்னார்குடி : ஜனநாயக நாட்டில் தேர்தல் என்றாலே திருவிழாதான். இதில் வேட்பாளர்கள் கொண்டாடப்படுகிறார்கள். வாக்காளர்கள் வணங்கப்படுகிறார்கள். தேர்தலை எவ்வித தவறும் நேரா வண்ணம் நடத்தி முடிக்கும் அலுவலர்களின் பணியோ திண்டாட்டமாய் அமைந்து விடுகிறது. தமிழகத்தின் 16வது சட்டசபைக்கான தேர்தல் வரும் ஏப்.6ம் தேதி நடக்க இருக்கிறது. அசாம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் அறிவிப்பு கடந்த 12ம் தேதி வெளியானது. இதற்கு ஒரு வருடத்திற்கு முன்னரே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் ஆகிய பணிகள் தொடங்கப்பட்டது. கடந்த நவம்பர் 21, 22 மற்றும் டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடி அமைந்துள்ள அனைத்து பள்ளிகளின் ஆசிரியர்கள் பணிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6 கோடியே 26 லட்சம். நடை முறையில் 1,500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற கணக்கில் 67 ஆயிரத்து 775 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில், தற்போது கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 23 ஆயிரம் வாக்குச்சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வாக்குச்சாவடியும் தலைமை தேர்தல் நடத்தும் அலுவலர், வாக்காளரை அடையாளம் காணும் அலுவலர், வாக்காளரிடம் கையொப்பம் பெற, அழியாத மை வைக்க, வாக்காளருக்கு வரிசை எண் கொண்ட வாக்களிக்கும் சீட்டு கொடுக்க, அதைப் பெற்றுக்கொண்டு, வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதி கொடுக்க என குறைந்தது 4 அலுவலர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள்.

காவலர்கள், ஆய்வு அலுவலர்கள் நீங்களாக இருப்பு வைக்கப்படும் அலுவலர்களையும் சேர்த்து ஏறக்குறைய 5 லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்கள் நடைபெற இருக்கிற தமிழக சட்டமன்ற தேர்தலில் பணியாற்ற இருக்கிறார்கள். இதில் 3 லட்சம் பெண்கள் அனைத்து மாவட்டங்களிலும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுவிட்டன. தொகுதி ஒன்று அல்லது இரண்டுக்கு வீதம் பயிற்சி வகுப்புகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடி களையும் ஒரு நிகழ்வாகவே அது அமைந்திருந்தது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் தேர்தல் என்றாலே திருவிழாதான். இதில் வேட்பாளர்கள் கொண்டாடப்படுகிறார்கள், வாக்காளர்கள் வணங்கப்படுகிறார்கள். தேர்தலை எவ்வித தவறும் நேரா வண்ணம் நடத்தி முடிக்கும் அலுவலர்களின் பணியோ திண்டாட்டமாய் அமைந்து விடுகிறது.

இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக முன்னாள் மாவட்ட செயலாளர் அன்பரசு கூறுகையில், கடந்த தேர்தல்களில் பயிற்சி வகுப்புகள், தேர்தல் முதல் நாள், தேர்தல் நாள், சிற்றுண்டி செலவு என மொத்தம் 1,100 முதல் தலைமை வாக்குச்சாவடி அலுவலருக்கு 2,050 வரை உழைப்பூதியம் வழங்கப்பட்டது. இத்தொகை கடந்த 16 ஆண்டுகளில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும் நிலையில் தற்போது உழைப்பூதியத்தை இரு மடங்காக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.கடந்த தேர்தல் வரை சொந்தத் தொகுதியிலேயே 2 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்தலின் முதல் நாள் பணி செய்யும் சட்டமன்ற தொகுதியில் பணியாணை பெற்று பணி செய்ய வேண்டியிருக்கும். வாக்குச்சாவடி அலுவலராக பணி செய்யும் தொகுதி சொந்த தொகுதியாக இருக்கக்கூடாது என்பதற்கு கூட நியாயமான காரணங்கள் இருக்கலாம். ஆனால், இரண்டு பயிற்சி வகுப்புகளும், வேறு தொகுதிகளில் தான் பங்கேற்க வேண்டும் என்பதில் என்ன நியாயம் இருக்க முடியும். 50 வயதிற்கு மேற்பட்டோருக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என முன்பு கூறப்பட்டது. ஆனால், தற்போது ஒருவர் விடாமல் அனைவருக்கும் பணி ஆணை வழங்கப்பட்டு இருக்கிறது. 5ம் தேதி காலையில் 10 மணிக்கு வேறு சட்டமன்ற தொகுதி எனும் கணக்கில் அதிகபட்சமாக 80 கி.மீ. வரை பயணித்து பணி ஆணை பெற வேண்டும்.பணி செய்யப் போகும் இடம் அறிமுகம் இல்லாத குக்கிராமமாக கூட இருக்கலாம். ஆனாலும், அங்கு பஸ் வசதி பிரச்னை, கொரோனா பிரச்னை, மற்ற சொல்ல இயலாத இடர்பாடுகளை தாண்டி சென்று சேருவதற்குள் மாலை நேரம் ஆகிவிடும். பின்னர் தேர்தல் பணிக்கான தளவாடங்களை அதிகாரிகள் எப்போது கொண்டு வருவார்கள் என வழி மேல் விழி வைத்து காத்து இருக்க வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெறப்பட்டு அவை சரியாக இயங்குகிறதா என சரிபார்த்து தேர்தல் தொடர்பான பணிகளை எல்லாம் ஒரு குழுவாக செய்து முடித்து பின் தேர்தல் பொருள்களுக்கு பாதுகாப்பாக அங்கேயே கொசுக்கடியில் தூங்க வேண்டும்.வரும் தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வாக்குப்பதிவு 12 மணி நேர தொடர் பணி. காலை 4 மணிக்கு எழுந்தால்தான் 5.30 மணி தொடங்கி நோட்டா உட்பட குறைந்தது 50 ஓட்டுகளை பதிவு செய்து வேட்பாளர்களின் ஏஜென்ட்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்திக்காட்டி பின்னர் பதிவான ஓட்டுகளை அழித்துவிட்டு அவர்களின் முன்னிலையில் 6.30 மணிக்குள் சீல் செய்திட வேண்டும். பெண் ஆசிரியைகளும், கணவனை இழந்த அலுவலர்களும், உடல்நிலை சரியில்லாத மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் ஊழியர்களும் இப்பணியில் படும் துன்பங்கள் ஏராளம்.தமிழகத்தின் கொரோனா வேகமாக பரவி வருகிறது என்று கூறிவிட்டு மாலை ஒரு மணி நேரம் கொரோனா பாதிப்பு உள்ளவர்களும் வாக்களிக்கலாம் என்கிறது தேர்தல் ஆணையம். சுகாதாரப் பணியாளர்களை போல் பாதுகாப்பு உடைகளை பயன்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு அனுபவம் இருக்காது. இதன் காரணமாக தேர்தலுக்குப் பின் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கொரோனா தொற்றுவந்தால் என்ன செய்வது. மாலை 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்து இயந்திரங்களை சீல் செய்து அனைத்து படிவங்களையும் பூர்த்தி செய்திட 8 மணி ஆகிவிடும். ஒரு மண்டல அலுவலருக்கு அதிகபட்சமாக 19 வாக்குச்சாவடிகள் வரை வழங்கப்படுகிறது. நள்ளிரவுக்கு பிறகு வாக்குப்பெட்டி எடுத்தவுடன் வீடு திரும்ப மறுநாள் ஆகிவிடும். இத்தனையும் ஜனநாயக கடமையை செய்யும் ஆசிரியர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களின் பணி போற்றப்பட வேண்டும்.கடந்த காலங்களில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும்போது அதில் பல செல்லாத ஓட்டுகளாக அறிவிக்கப்படுகிறது. இதை தவிர்த்திட தபால் ஓட்டுகளில் சான்றொப்பம் இட தகுதியான அலுவலர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் உடனடியாக வெளியிட வேண்டும். இந்நிலையில் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணி செய்யும் அனைவருக்கும் தபால் ஓட்டு வழங்கப்படுவதையும் மேலும் அவர்களின் தபால் வாக்குகளை பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களில் சேர்த்திடவும், பணி செய்யும் இடங்களில் போதுமான தண்ணீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கிடைப்பதையும், தேர்தல் ஆணையம் உறுதி செய்திட வேண்டும் என அன்பரசு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.