தைவான் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு 

ஹுவாலியன்: கிழக்கு தைவானில் வெள்ளிக்கிழமை லாரி மீது ரயில் மோதி தடம் புரண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.  மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த நாட்டில் நேரிட்ட மிக மோசமான ரயில் விபத்து இது என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

தைவானில் 4 நாள் பண்டிகையில் முதல் நாளான வெள்ளிக்கிழமை, மலைப்பாதை வழியாக 492 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ரயில் பொறியியல் பராமரிப்பு குழுக்கு சொந்தமான லாரி ஒன்றின் மீது மோதி ஹூலியன் கவுண்டியில் தடம் புரண்டது. 

ரயில் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த அந்த லாரியில் அப்போது யாரும் இல்லை. அந்த லாரி சரிவில் தானாக சருக்கி ரயில் பாதையின் குறுக்கே வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. லாரியில் ரயில் மோதியபோது அதில் சுமாா் 492 போ் இருந்தனா்.

இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. சுரங்கப்பாதையிலிருந்து வெளியே வந்தபோது இந்த மோதல் ஏற்பட்டதால் ரயில் பெட்டிகள் சுரங்கச் சுவா்களில் மோதி நசுங்கியதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் ரயில் ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் இருவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 51 பேரில் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில் ஜப்பானியர் 2 பேர், மக்காவைச் சேர்ந்த ஒருவர் உள்பட 146-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்.

சம்பவ இடத்தில் சில உருவம் தெரியாத முழுமையற்ற சில உடல்கள் காணப்படுவதால், இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று அந்நாட்டு தீயணைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த விபத்தில் பல ரயில் பெட்டிகள் சேதமடைந்துள்ளதாகவும் அவற்றை அகற்றுவதற்கு ஒரு வாரம் ஆகும் என்று உள்ளூர் தொலைக்காட்சியில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. 

“பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்த பயணிகளுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாக தைவானின் பிரதமர் கூறியுள்ளார். 

தைவான் வரலாற்றில் இந்த விபத்துதான் மிக மோசமான ரயில் விபத்து என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னா் அந்த நாட்டில் கடந்த 1991-ஆம் ஆண்டு நேரிட்ட விபத்தில் 30 பேரும், 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் 18 பேர் உயிரிழந்தனா். 

” விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துள்ள ஜப்பான், தைவானில் இருந்து கோரிக்கை வந்தால் உதவுவதற்கு தயாராக இருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. 

தைவானில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான ரயில் ஜப்பானிய உற்பத்தியாளர் ஹிட்டாச்சியால் தயாரிக்கப்பட்டு 2007 மே மாதத்தில் தனது சேவையை  தொடங்கியது என்று ஜப்பானின் கியோடோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.