பாஜ தலைவர்களை வெளியாட்கள் எனக் கூறி நேதாஜியை அவமதிக்கிறார்: மம்தா மீது பிரதமர் மோடி சாடல்

சோனர்பூர்: மேற்கு வங்கத்தில் 3ம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடக்க உள்ளது. இதையொட்டி, தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டம் சோனர்பூரில் நேற்று நடந்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:ஆங்கிலேயர்கள் நம்மை பிரிக்க முயற்சித்தனர். அப்போது, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ‘இந்தியா என்பது ஒன்றே, அனைத்து இந்தியர்களின் நம்பிக்கையும், ஆசையும் ஒன்றே’ என்றார். ஆனால், இன்று நேதாஜியின் கொள்கைக்கு விரோதமான பிரசாரங்கள் மிகுந்த வலியை தருகின்றன. திரிணாமுல் காங்கிரசும், மம்தா பானர்ஜியும், பாஜ தலைவர்களை வெளியாட்கள் என கூறுகிறார்கள்.நாம் அனைவரும் இந்திய தாயின் குழந்தைகள். எந்த இந்தியனும் வெளியாள் கிடையாது. மே 2ம் தேதி மேற்கு வங்கத்தில் பாஜ அரசு அமைந்ததும், இந்த மண்ணின் மைந்தன் முதல்வராக்கப்படுவார்.2024ம் ஆண்டில் மம்தா, எனது எம்பி தொகுதியான வாரணாசியில் போட்டியிடப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள். இதிலிருந்தே நந்திகிராமில் மம்தா அவரது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார்.நீங்கள் தாராளமாக வாரணாசிக்கு வரலாம். வாரணாசி, உபி மக்கள் மேற்கு வங்க மக்களைப் போல பெரிய மனது கொண்டவர்கள். நிச்சயம் உங்களை வெளியாள் என கூற மாட்டார்கள். இவ்வாறு மோடி பேசினார்.23 பேரணியில் பங்கேற்ற மோடிதமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி இதுவரை பிரதமர் மோடி 23 பிரசாரக் கூட்ட பேரணிகளில் பங்கேற்றுள்ளார். நாளை மறுதினத்துடன் தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், கேரளா மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் நிறைவடைகின்றன. மேற்கு வங்கத்தில் மட்டும் மேலும் 5 கட்டமாக ஏப்ரல் 29ம் தேதி வரை தேர்தல் நடக்க உள்ளது. எனவே, மேற்கு வங்கத்தில் மேலும் பல்வேறு பேரணிகளில் பிரதமர் மோடி பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.வீல்சேர் நாடகத்தை நிறுத்துங்கள்மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி, குண்டர் தாக்கியதால் காலில் அடிப்பட்டு விட்டதாக கட்டுடன், வீல்சேரில் வலம் வந்து, மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். அவர் மக்களின் அனுதாபத்தை பெற நாடகமாடுவதாக பாஜ.வும், காங்கிரசும் ஏற்கனவே குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், அடிபட்ட காலை அவர் சர்வ சாதாரணமாக அசைப்பது போன்ற ஒரு வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. பாஜ.வின் செய்தித் தொடர்பாளரான பிரனாய் ராய், 30 விநாடிகள் ஓடும் இந்த வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘தனக்கு எந்த காலில் அடிபட்டது என்பதை மம்தா மறந்து விட்டார். இந்த வீடியோ உங்கள் திரிணாமுல் கட்சியினர் எடுத்ததுதான். நாடகத்தை நிறுத்துங்கள். பொதுமக்களிடம் நம்பிக்கையை இழக்காதீர்கள்’ என்று கூறியுள்ளார். இதற்கு திரிணாமுல் காங்கிரசார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.