பின்னணியில் ஏதும் திட்டமா? பாஜகவின் பேச்சு வித்தியாசமாக இருக்கிறதே?

மேற்குவங்க மாநிலத்தில், நந்திகிராம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வியடைவார் என்று குறிப்பாக ஆரூடம் கூறியுள்ளார் பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா.

நந்திகிராம் தொகுதியில், மம்தா பானர்ஜி போட்டியிடத் தயாரா? என்று வலியச் சென்று சவால் விடுத்தது பாஜக. பொதுவாக, பல அரசியல் தலைவர்கள் அத்தகைய சவாலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால், மம்தா பானர்ஜி தைரியமாக முன்சென்றார். நந்திகிராமில், மம்தாவுக்கு நெருக்கமாக இருந்து, பின்னர் திரிணாமுல் கட்சியிலிருந்து விலகிய ஒருவரையே வேட்பாளராக நிறுத்தியது பாஜக.

அத்தொகுதியில், தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அத்தொகுதியில் மம்தா தோற்பார் என்று கூறுகிறார் ஜே.பி.நட்டா. இதற்கு முன்னர், அம்மாநிலத்தில் முதற்கட்ட தேர்தல், 27 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த நிலையில், அதுதொடர்பாக பேசிய அமித்ஷா, பாஜக 23 தொகுதிகளை கைப்பற்றும் என்று பேசியிருந்தார். அதற்கு பதிலளித்த மம்தா, வாக்கு இயந்திரத்திற்குள் அமித்ஷா நுழைந்து பார்த்தாரா? என்று கேள்வி எழுப்பினார்.

மேற்குவங்கத்தில் சர்ச்சைக்குரிய முறையில், இதுவரை இல்லாத வகையில், 8 கட்ட தேர்தல்கள் அறிவித்தபோதே விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இப்போது பாஜக, நாங்கள் இன்னின்ன தொகுதிகளில் வெல்வோம் மற்றும் இந்த தொகுதியில் இவர் தோற்பார், அவர் தோற்பார் என்று, தேர்தல் நடந்துகொண்டிருக்கும்போதே குறிப்பிட்டு பேசி வருகிறது.

இது பல அரசியல் பார்வையாளர்களுக்கு சந்தேகத்தை எழுப்புகிறது. பலகட்ட தேர்தல் நடக்கும் நிலையில், பாஜகதான் வெல்லப்போகிறது என்றதொரு மாயையை மக்களிடையே ஏற்படுத்தி, அடுத்தடுத்த கட்ட தேர்தல்களில், வாக்குப்பதிவை தமக்கு சாதகமாக மாற்றும் ஒரு உத்தி என்று இதை வைத்துக்கொண்டாலும், இது, அரசியலில் மிகவும் மலிவான ஒரு உத்தி என்று மதிப்பிடப்படுகிறது.

ஆனால், ஜனநாயக அரசியலில், எப்போதுமே தரை டிக்கெட் நிலையைவிட கீழிறங்கி ஆடும் மோடி & அமித்ஷாவின் பாஜகவுக்கு, இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்கின்றனர் அதே அரசியல் பார்வையாளர்கள்!

 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.