கப்பலூர் சுங்கச்சாவடியில் நிலுவைத் தொகையை கட்டாமல் வந்த அரசு பேருந்துகளை அனுமதிக்காததால், போக்குவரத்து ஊழியர்களுக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
மதுரையிலுள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் கடந்த ஒரு மாதமாக வெளியூர் மற்றும் உள்ளூர் செல்லும் பேருந்துகள், கப்பலூர் சுங்கச்சாவடியை உபயோகம் செய்யாமல் மாற்றுப் பாதையில் சென்று வந்துள்ளது.
இதனால் பழைய நிலுவைத் தொகை கட்டப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பழைய நிலுவைத் தொகையை அரசு பேருந்துகளுக்கு செலுத்தி விட்டதாக போக்குவரத்து அதிகாரிகள் கூறியதால், நேற்று இரவு கப்பலூர் சுங்கச்சாவடியில் அரசு பேருந்துகள் செல்ல முயன்றுள்ளன.
ஆனால், பேருந்துகளை சுங்கச்சாவடி ஊழியர்கள் சிறை பிடித்துக்கொண்டு, பேருந்துகளை அனுமதிக்க இயலாது என்று மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர், சுங்கச்சாவடி ஊழியர்கள் என இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.
வாகனங்கள் அடுத்தடுத்து வரிசையாக நின்றதால், சுங்கச்சாவடி ஊழியர்களை பிற வாகன ஓட்டுநர்களும் முற்றுகையிட்டனர். மேலும், பேருந்தில் இருந்த பயணிகளும் போக்குவரத்து ஓட்டுனர்களுக்கு ஆதரவாக வந்து களமிறங்கி சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சமாதானம் பேசி பேருந்துகளை இயக்க வழிவகை செய்தனர்.
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.