மம்தா பானர்ஜி வேறு தொகுதியில் போட்டியா? -மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

மம்தா பானர்ஜி வேறு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக பாஜக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது, மக்கள் மனதில் குழப்புவதற்காக திட்டமிட்டே இந்த பொய் பரப்பப்படுகிறது என திரிணமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற்றது. இதில், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் தேர்தலை சந்தித்தது. இங்கு மம்தாவுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவரான சுவேந்து அதிகாரி போட்டியிட்டார்.

இவர், அந்தத் தொகுதியில் மிகவும் செல்வாக்கு பெற்ற நபர் என்பதால், இத் தேர்தலானது மம்தா பானர்ஜிக்கு மிகவும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், மேற்கு வங்க மாநிலம் உலுபேரியா பகுதியில் பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி “நந்திகிராம் தொகுதியில் தான் தோல்வி அடைவது உறுதி என்பது மம்தாவுக்கு தெரிந்துவிட்டது. அதனால், இறுதிக்கட்ட தேர்தலில்வேறு ஏதேனும் தொகுதியில் போட்டியிட அவர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உண்மையா என்பதை மம்தா தெரிவிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த மம்தா பானர்ஜி ‘‘நந்திகிராம் தொகுதியில் நான் வரலாறு காணாத வெற்றியை பெறுவேன். ஆதலால், வேறு தொகுதியில் போட்டியிட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அப்படியே இருந்தாலும், நீங்கள் இந்த விஷயத்தில் எங்களுக்கு யோசனை கூறவோ, அறிவுரை கூறவோ தேவையில்லை.’’ எனக் கூறினார்.

இந்தநிலையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.டெரிக் ஓ பிரைன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

‘‘அமித் ஷாவும், பிரதமர் மோடியும் நேற்று இரவு ஆலோசனை நடத்தியுள்ளனர். மேற்குவங்கத் தேர்தலில் பாஜகவை விடவும் திரிணமூல் காங்கிரஸ் கூடுதல் வாக்கு பெறும் சூழல் இருப்பது அவர்களுக்கு தெரிய வந்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவை விட திரிணமூல் காங்கிரஸ் 3 சதவீத வாக்குகள் கூடுதலாக பெற்றது. ஆனால் சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கூடுதலாக 6 சதவீத வாக்குகள் பெற்றும் சூழல் இருப்பது உறுதியாகி விட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பாஜக தலைவர்கள் திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராக அவதூறு பரப்பி வருகின்றனர்’’ எனக் கூறினார்.

இதுபோலவே திரிணமூல் காங்கிரஸ் துணைத் தலைவர் யஷ்வந்த் சின்கா கூறுகையில் ‘‘மம்தா பானர்ஜி வேறு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக பாஜக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. மக்கள் மனதில் குழப்புவதற்காக திட்டமிட்டே இந்த பொய் பரப்பப்படுகிறது. முதலில் பிரதமர் மோடி இந்த பொய்யை கூறினார். பின்னர் இதனையே பாஜக தலைவர் நட்டாவும் கூறுகிறார். மொத்தத்தில் தோல்வி பயம் அவர்களிடம் தெரிகிறது’’ எனக் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.