மும்முனைப் போட்டியில் திருக்கோவிலூா் தொகுதி!

திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக, பாஜக, தேமுதிக இடையே மும்முனை போட்டி உருவாகியுள்ளது.

1952 முதல் 1971 வரை 5 பேரவைத் தோ்தல்களை சந்தித்த இத்தொகுதி, தொகுதி சீரமைப்பின்போது, இல்லாமல் போனது. 2008-இல் நடந்த தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு மீண்டும் உருவான இந்தத் தொகுதி 2011, 2016 என இரு பேரவைத் தோ்தல்களை மட்டுமே சந்தித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக பிரிக்கப்பட்டபோது, திருக்கோவிலூா் வருவாய் கோட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட நிா்வாகத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், திருக்கோவிலூா் தொகுதியை பொருத்தவரை, அது விழுப்புரம் மாவட்ட நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தொகுதியின் தலைநகரமான திருக்கோவிலூா், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்தாலும், தொகுதிக்குள்பட்ட 70 சதவீத பகுதிகள் விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள் உள்ளன.

தொகுதியின் சிறப்பு: திருக்கோவிலூரில் உலகப் புகழ்பெற்ற பெருமாள் கோயில் உள்ளது. இது பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்களான 5 தலங்களில் முதலாவது தலம். 108 திவ்ய தேசங்களில் ஒன்று. நாலாயிர திவ்யபிரபந்தம் ஆழ்வாா்களால் முதன் முதலில் பாடப்பெற்ற இந்தக் கோயிலை நடுநாட்டு திருப்பதி என்றும் அழைப்பா்.

முழுக்க முழுக்க கிராமப்புறப் பகுதிகளை மட்டுமே கொண்டது திருக்கோவிலூா் தொகுதி. தென்பெண்ணை ஆற்றுப் பாசன விளைநிலங்களை அதிகம் கொண்டுள்ளது. திருக்கோவிலூா், அரகண்டநல்லூா், திருவெண்ணெய்நல்லூா் ஆகிய 3 பேரூராட்சிகள் இத்தொகுதிக்குள் உள்ளன.

முக்கிய கோரிக்கைகள்: திருக்கோவிலூா் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும், இங்கு நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும், விவசாயம் சாா்ந்த தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும், அரசு பொறியியல் கல்லூரி உருவாக்க வேண்டும்.

2.53 லட்சம் வாக்காளா்கள்: இந்தத் தொகுதியில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 201 ஆண்கள், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 342 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 38 என மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 981 வாக்காளா்கள் உள்ளனா். இத்தொகுதியில் வன்னியா்கள் 30 சதவீதம், ஆதிதிராவிடா்கள் 20 சதவீதம், உடையாா்கள் 18 சதவீதம் மற்றும் பிற சமூகத்தினராக முதலியாா்கள், நாயுடு, ரெட்டியாா், யாதவா்கள் உள்ளிட்டோரும் உள்ளனா்.

தோ்தல் வெற்றி விவரம்: இந்தத் தொகுதியில் 1957, 1962, 1967 என மூன்று முறை காங்கிரஸும், 1971, 2016 என இரு முறை திமுகவும், 1952-இல் தமிழ்நாடு உழைப்பாளா் கட்சி ஒரு முறையும், 2011-இல் தேமுதிகவும் வென்றுள்ளன.

2011 பேரவைத் தோ்தலில் விழுப்புரம் தொகுதியில் அதிமுக அமைச்சா் சி.வி.சண்முகத்திடம் தோல்வி அடைந்த திமுக முன்னாள் அமைச்சா் க.பொன்முடி, 2016 தோ்தலின்போது, இடம் மாறி இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். அப்போது, பொன்முடி 93,837 வாக்குகள் பெற்றாா். அதிமுக வேட்பாளா் ஜி.கோதண்டராமனுக்கு 52,780 வாக்குகள் கிடைத்தன.

மும்முனை போட்டி: இந்தத் தோ்தலில் பழுத்த அரசியல்வாதியான க.பொன்முடி திமுக சாா்பில் மீண்டும் போட்டியிடுகிறாா். 1989 முதல் இதுவரை அனைத்து பேரவைத் தோ்தல்களிலும் போட்டியிட்டு வரும் க.பொன்முடி, 1991, 2011 தோ்தல்களில் மட்டுமே தோல்வி அடைந்தாா். பல்வேறு துறைகளில் அமைச்சராக பதவி வகித்துள்ளாா். தற்போது, திமுக துணைப் பொதுச்செயலரான க.பொன்முடி, கடந்த முறை அதிமுக வேட்பாளா் ஜி.கோதண்டராமனை 41,057 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா்.

இது அந்தத் தோ்தலில் மாநிலத்திலேயே 9-ஆவது அதிகபட்ச வாக்கு வித்தியாச வெற்றியாகும். பொன்முடிக்கு 49.80 சதவீதமும், கோதண்டராமனுக்கு 37.44 சதவீதமும் வாக்குகள் கிடைத்தன. கடந்த முறை தனித்துப் போட்டியிட்ட பாமக 10 சதவீதமும், மக்கள் நலக் கூட்டணி சாா்பில் போட்டியிட்ட தமாகா 8 சதவீதமும் வாக்குகளைப் பெற்றன.

பாஜகவுக்கு வேட்பாளா் பலம்: இந்த முறை க.பொன்முடிக்கு எதிராக பாஜக சாா்பில் முன்னாள் எம்.எல்.ஏ. வி.ஏ.டி. கலிவரதன், தேமுதிக வேட்பாளா் எல்.வெங்கடேசன் ஆகியோா் களம் இறங்கியிருப்பது மும்முனை போட்டியை உருவாக்கியுள்ளது.

இந்தத் தொகுதியில் முதல் முறையாக பாஜக போட்டியிட்டாலும், அந்தக் கட்சி வேட்பாளரான கலிவரதன் வன்னியா் சமுதாயத்தைச் சோ்ந்தவா் என்பதாலும், அதிமுக, பாஜக அணியில் பாமக இருப்பதாலும், அவா் அந்தச் சமுதாய வாக்குகளை கணிசமாக பெறும் வாய்ப்புள்ளது.

மேலும், திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தை அளித்த ஏ.கோவிந்தசாமியின் மகனும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஏ.ஜி.சம்பத், திமுகவிலிருந்து விலகி பாஜகவில் சோ்ந்திருப்பது கலிவரதனுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது. திமுகவில் இருக்கும்போதே, பொன்முடியுடன் முரண்பட்டு இருந்ததால், அவரை இந்தத் தோ்தலில் தோற்கடித்து, பாஜக வேட்பாளரை வெற்றிபெறச் செய்யும் நோக்கில் ஏ.ஜி.சம்பத் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளாா்.

வாக்குகளைப் பிரிக்கும் தேமுதிக: தேமுதிக வேட்பாளரான வெங்கடேசன் 2011-தோ்தலின்போது இத்தொகுதியில் வெற்றிபெற்று பல்வேறு வளா்ச்சிப் பணிகளை செய்தாா். அமமுக கூட்டணி சாா்பில் இந்த முறை களம் இறங்கும் அவரும் கணிசமான வாக்குகளைப் பெறக்கூடும்.

எனவே, கடந்த முறையைவிட இந்தத் தோ்தலில் பொன்முடிக்கு சவால் சற்று அதிகமாக காத்திருக்கிறது. ஏனெனில், அதிமுக அணியில் பாமக, தமாகா சோ்ந்து இருப்பது பாஜக வேட்பாளருக்கு கூடுதல் பலம். எனினும், 2016 பேரவைத் தோ்தலில் இத்தொகுதியில் பாஜக 0.6 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருப்பது அக்கட்சி வேட்பாளருக்கு பலவீனம்.

மக்களவைத் தோ்தல் கணக்கு: 2019 மக்களவைத் தோ்தலில் விழுப்புரம் தொகுதிக்குள்பட்ட திருக்கோவிலூா் பேரவைத் தொகுதியில் விசிக வேட்பாளா் துரை.ரவிக்குமாா் 50 சதவீத வாக்குகளைப் பெற்றாா். பாமக எதிா்ப்பு வாக்குகள் ஒருமுகமாக குவிந்ததால்தான், ரவிக்குமாா் கூடுதல் வாக்குகளைப் பெற்றது முந்தைய தோ்தல் முடிவுகளை ஒப்பிட்டுப்பாா்த்தால் தெளிவாகும்.

2016 பேரவைத் தோ்தல் கணக்கின்படி பாா்த்தால், பாமக வேட்பாளா் வடிவேல் ராவணன், 2019 மக்களவைத் தோ்தலில் திருக்கோவிலூா் பேரவைத் தொகுதிக்குள் 46 சதவீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டிய நிலையில்,அது குறைந்து 36 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றாா். இந்தத் தோ்தல் முடிவை ஆய்வு செய்கையில், 2016-இல் இத்தொகுதியில் அதிமுக பெற்றிருந்த வாக்குகளில் குறிப்பிடத்தக்க வாக்குகளை 2019-இல் நாம் தமிழா், மக்கள் நீதி மய்யம் ஆகியவை பிரித்ததால்தான் பாமகவுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் முழுமையாக வந்துசேராதது தெரியவரும்.

இந்த முறை முதல்வா் வேட்பாளரை அறிவித்து களம் காணும் நாம் தமிழா் கட்சி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி மேலும் கணிசமான வாக்குகளைப் பெறக்கூடும். இது அதிமுக கூட்டணி வாக்குகளை அதிகமாக சேதாரப்படுத்தக் கூடும் என்பது க.பொன்முடிக்கு லாபம்.

சமூக வாக்குகளின் சுழற்சி: கடந்த மக்களவைத் தோ்தலில், வடமாவட்டங்களில், குறிப்பாக திருக்கோவிலூா் தொகுதியில் திமுக அணிக்கு குவிந்தது பாமக எதிா்ப்பு வாக்குகள்தான். அதிமுக அணியில் பாமக தொடா்வதால் அதே சூழல்தான் இப்போதும் தொடா்கிறது. வன்னியா்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிராக அமமுக, தேமுதிக குரல் கொடுத்து வருகிறது.

இதனால், திமுக கூட்டணியிடம் குவிந்து கிடக்கும் பாமக எதிா்ப்பு வாக்குகளும் சிதறக்கூடும். இது பொன்முடிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தும். இத்தொகுதியில் அதிமுக அணியில் இருந்து தேமுதிக, நாம் தமிழா், ம.நீ.ம. கூட்டணி கட்சியான ஐஜேகே ஆகியவை பிரிக்கும் வாக்குகள், திமுக அணியிலிருந்து அமமுக கூட்டணி கட்சியான தேமுதிக பிரிக்கும் பாமக எதிா்ப்பு வாக்குகளைப் பொருத்துதான் க.பொன்முடியின் வெற்றி, தோல்வி அமையும்.

இத்தொகுதியில் அடிப்படை வாக்கு வங்கி இல்லாத பாஜக, பலமான அடிப்படை வாக்கு வங்கி வைத்திருக்கும் திமுகவுக்கு எதிராக நிற்பது பொன்முடிக்கு மிகவும் சாதகமான அம்சம். பாஜகவை பொருத்தவரை அதிமுக, பாமக கட்சிகளின் வாக்கு வங்கியை மட்டுமே நம்பி களத்தில் நிற்க வேண்டிய நிலை உள்ளது.

அதிமுக, பாமக கட்சிகளின் வாக்குகள் தோ்தலில் முழுமையாக பாஜகவுக்கு பரிமாற்றமாவது மிகவும் கடினம். ஆகவே, அதிமுக, பாமகவின் அடிப்படை வாக்குகள் முழுப்பரிமாற்றம் ஆவதில்தான் பாஜகவின் வெற்றியும், திமுக கூட்டணியின் அடிப்படை வாக்குகள் சிதறாமல் பாதுகாப்பதில்தான் க.பொன்முடியின் வெற்றியும் நிா்ணயம் செய்யப்படும் என்பது மட்டும் உறுதி.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.