இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘96’. இதில் சிறு வயது த்ரிஷா கதாபாத்திரத்தில் நடித்தவர் கெளரி கிஷன். இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதேபோல் கெளரி கிஷனுக்குப் பல்வேறு வாய்ப்புகள் வந்தன.
தற்போது தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் கெளரி கிஷன். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இதில் கெளரி கிஷனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
— Gouri G Kishan (@Gourayy) April 2, 2021
இதுகுறித்து கெளரி கிஷன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அனைவருக்கும் வணக்கம். எனக்கு கோவிட்-19 தொற்று உறுதியாகியிருப்பதை எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நல விரும்பிகளுக்குத் தெரிவிக்கவே இதைப் பதிவிடுகிறேன். கடந்த வாரத்திலிருந்து நான் வீட்டுத் தனிமையில், நல்ல கவனிப்பில் இருக்கிறேன். மருத்துவரின் அறிவுரையைப் பின்பற்றித் தேறி வருவதால் கவலைப்பட எதுவுமில்லை.
முழுமையாக குணமாகும் வரை நான் பொறுமையாகக் காத்திருந்து, ஓய்வெடுத்து, உங்கள் அத்தனை பேரின் அன்பான வாழ்த்துகளையும் படிக்கப் போகிறேன் ஏனென்றால் அவற்றுக்குக் கண்டிப்பாகப் பலன் உள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “கடந்த இரண்டு வாரங்களில் என்னுடன் தொடர்பில் இருந்திருந்தால், அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருந்தால் தயவுசெய்து உங்களைப் பரிசோதித்து, கிருமி தொற்றைக் கட்டுப்படுத்தத் தேவையானதைச் செய்து கொள்ளுங்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.