ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற முதலாவது செயற்குழு கூட்டத்தில் கலந்துக்கொண்ட செயற்குழு உறுப்பினர் தமது கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என கடும் அழுத்தங்களை கொடுத்துள்ளதாக தெரியவருகிறது.
சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பிரதேச தலைவர்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாற்றந்தாய் மனப்பான்மையில் கவனிப்பதாக கூறியே செயற்குழு உறுப்பினர்கள் இந்த அழுத்தத்தை கொடுத்துள்ளனர்.
ஒரு லட்சம் கிலோ மீற்றர் வீதி நிர்மாணிப்பு திட்டத்தில் ஒரு பகுதியின் ஒப்பந்தத்தை கூட சுதந்திரக் கட்சியினருக்கு அரசாங்கம் வழங்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அப்போது கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர்கள் மகிந்த அமரவீர மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர், இவ்வாறு அரசியல் காரணங்கள் இல்லாத விடயத்தை அடிப்படையாக கொண்டு அரசாங்கத்தில் இருந்து விலக தாம் தயாரில்லை எனக் கூறியுள்ளனர். கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக தீர்மானித்தால், தாமும் அந்த தீர்மானத்தை மதித்து அரசாங்கத்தில் இருந்து விலக தயார் எனவும் அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
அரசாங்கத்தில் இருந்து விலக அரசியல் காரணம் தேவை எனவும் அப்படி அரசியல் காரணத்தின் அடிப்படையில் அரசாங்கத்தில் இருந்து விலகினால், அது கட்சியினரின் கௌரவத்திற்கு பாத்திரமாக அமையும் எனவும் அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.