இரவு 7 மணியுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்.. பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு !!

தமிழகத்தில் உள்ள 234 சட்டப் பேரவை தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் ஆகியவற்றுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 537 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவையாகவும் 10,830 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும் தேர்தல் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் தேவையான 1 லட்சத்து 55,102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்,1 லட்சத்து 14 ஆயிரத்து 205 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1 லட்சத்து 20,807 விவிபாட் இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. இந்தத் தேர்தலில் 3 கோடியே 8 லட்சத்து 38,473 ஆண் வாக்காளர்கள், 3 கோடியே 18 லட்சத்து 28,727 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 6 கோடியே 26 லட்சத்து 74,446 பேர் வாக்களிக்க உள்ளனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரம் இன்று இரவு 7 மணியுடன் நிறைவடைகிறது. அதனைத் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய நடை முறைகள் குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

தேர்தல் பிரச்சாரம் 4 ஆம் தேதி இரவு 7 மணிக்கு முடிவடைகிறது. அதன் பிறகு, தேர்தல் சம்பந்தமான பொதுக்கூட்டமும் ஊர்வலமும் நடத்தக்கூடாது. தேர்தல் சம்பந்தமாக சினிமா தியேட்டர் மூலமாகவோ, தொலைக்காட்சி மூலமாகவோ அல்லது வேறு எந்த எலக்ட்ரானிக் பொருட்கள் மூலமோ பிரச்சாரங்களை வெளியிடக்கூடாது.

இசை நிகழ்ச்சிகள் மூலமாகவும், வேறு எந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலமாகவும் பொதுமக்களை கவர்கின்ற வகையில் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது. இதனை மீறினால் 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

4 ஆம் தேதி இரவு 7 மணிக்குள், சட்டமன்ற தொகுதியின் வாக்காளராக இல்லாத வெளியாட்கள் அனைவரும் அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். ஒருவேளை அந்த குறிப்பிட்ட தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் வேறு தொகுதியில் வாக்காளராக இருந்தாலும், அவரை வெளியே செல்ல கட்டாயப்படுத்தக்கூடாது. ஆனால், அதே சமயம் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது.

சட்டமன்றத் தொகுதிக்கு வெளியிலிருந்து உள்ளே வரும் வாகனங்களை பரிசோதனை செய்ய அந்தந்த சட்டமன்ற தொகுதியின் எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட வேண்டும். பிரச்சாரத்திற்காக அனுமதிக்கப்பட்ட வாகனங்களின் அனுமதி 4 ஆம் தேதி இரவு 7 மணியுடன் முடிவடைந்துவிடும்.

தேர்தல் நாளன்று ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி பெற முடியும். அதாவது, தன்னுடைய பயன்பாட்டிற்கான ஒரு வாகனம், தன்னுடைய தேர்தல் பொது முகவர் பயன்பாட்டுக்கான வாகனம், வேட்பாளருக்காக அல்லது கட்சிக்காக பணியாற்றுபவர்களுக்கான வாகனம் ஆகியவை ஆகும். இந்த 3 வாகனங்களுக்கும் அளிக்கப்படும் அனுமதி, வாக்குப்பதிவு நாள் அன்றைக்கு மட்டுமே செல்லுபடி ஆகும். அனுமதிக்கப்பட்ட இந்த 3 வாகனங்களை மட்டுமே வாக்குப்பதிவு நாளன்று பயன்படுத்தப்பட வேண்டும்.

வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வரவும், திரும்ப சென்று அவர்களை வீட்டில் விடவும் எந்தவிதமான வாகனங்களையும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வைத்துக்கொள்ளக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் அது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தண்டனைக்கு உரியதாகும்.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.