கொரோனா 2வது அலை தீவிரமடைகிறது தினசரி பாதிப்பு லட்சத்தை நெருங்கியது: பிரதமர் மோடி அவசர ஆலோசனை

புதுடெல்லி: கொரோனா 2வது அலை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில், நாடு முழுவதும் தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கி இருக்கிறது. நேற்று  ஒரே நாளில் 93,249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.கொரோனா 2வது அலை இந்தியாவில் படுவேகமாக பரவி வருகிறது. கடந்த 25 நாட்களாக தொடர்ந்து தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதார துறை அமைச்சகம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி வெளியிட்ட புள்ளி விவரத்தில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 93,249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன் கடந்த செப்டம்பர் 19ம் தேதி 93,337 பேர் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு தற்போது அந்த எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளது.மேலும், நாடு முழுவதும் ஒரே நாளில் 513 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பாதிப்பு 1 கோடியே 24 லட்சத்து 85,509 ஆகவும், பலி எண்ணிக்கை 1 லட்சத்து 64 ஆயிரத்து 623 ஆகவும் உள்ளது. தினசரி பாதிப்பில் 80 சதவீதம் மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், கர்நாடகா, டெல்லி, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய 8 மாநிலங்களில் பதிவாகி உள்ளது. கடந்த பிப்ரவரி 12ம் தேதி, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1.35 லட்சமாக இருந்த நிலையில் தற்போது, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 லட்சத்து 91 ஆயிரத்து 597 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா 2வது அலை ஏப்ரல் 15ம் தேதிக்கு பிறகு உச்சத்தை எட்டும் என ஆய்வாளர்கள் கணித்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பிரதமர்மோடி தலைமையில் உயர்மட்ட குழுவினர் அவசர ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், அமைச்சரவை செயலாளர், பிரதமரின் தலைமை செயலாளர், சுகாதார செயலாளர் மற்றும் நிதிஆயோக் உறுப்பினர் வினோத் பால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில், கொரோனா பரவலை தடுப்பது குறித்தும், தடுப்பூசி போடும் பணி குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, பல மாநில அரசுகள் ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், மத்திய அரசும் வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.ஏப்.6-14ம் தேதி வரை விழிப்புணர்வு நிகழ்ச்சி* கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5 அம்ச உத்திகளான பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சையை அதிகரித்தல், கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்தல், தடுப்பூசிக்கான இலக்கு அணுகுமுறையை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை தீவிரமாக அமல்படுத்த ஆலோசனையில் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.* 100% அனைவரும் மாஸ்க் அணிதல், தனிநபர் சுகாதாரம் பேணுதல் குறித்து சிறப்பு பிரசாரம் செய்தல், பொது இடங்கள், பணியிடங்கள் மற்றும் பொது சுகாதார வளாகங்களில் கிருமிநாசினி தெளித்தல் போன்ற கொரோனா தொடர்பான நடத்தைகளை வரும் 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை மேற்கொள்ள கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.* தொற்று அதிகரித்துள்ள மகாராஷ்டிரா, பஞ்சாப், சட்டீஸ்கர் மாநிலங்களில் பொது சுகாதார நிபுணர்கள், மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவை அனுப்பி வைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.7.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி* இதுவரை நாடு முழுவதும் 7 கோடியே 59 லட்சத்து 79,651 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.* இதில், 3 கோடியே 33 லட்சத்து 10,437 பேர் மகாராஷ்டிரா, குஜராத், உபி, ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலத்தை சேர்ந்தவர்கள்.* அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 73 லட்சத்து 54,244 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.