சுவர் விளம்பரங்களை வைத்து கருத்துக் கணிப்பு…! – வாசகர் பகிரும் தேர்தல் சுவாரஸ்யம் #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், [email protected]க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மீண்டும் ஒரு தேர்தலுக்கு தயாராகிவிட்டது தமிழ்நாடு. உலகின் வேறெந்த ஜனநாயக நாட்டுடனும் ஒப்பிட முடியாத இந்தியாவை போன்றே அதன் தேர்தல்களும் வித்தியாசமானவை. திருவிழா கொண்டாட்ட உணர்வை தருபவை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்றபடி கொண்டாட்டங்களின் வழிமுறைகள் மாறினாலும், அனைத்து மாநிலத்தவரும் ஒருமித்து ரசிக்கும் சென்டிமென்ட் காமெதேர்தலுக்குப்க் கலந்துகட்டிய இந்திய மசாலா சினிமாவை போலவே இந்நாட்டின் தேர்தல்களும் காரசாரமான மசாலா கலவைகள்தான்.

ஒரே வித்தியாசம், இந்திய மாஸ் ஹீரோவின் படத்தின் முடிவை எளிதாக யூகிப்பது போல இந்திய தேர்தல்களின் முடிவுகளை அவ்வளவு எளிதாக யூகித்துவிட முடியாது. ஐந்து வருட அரசியல்வாதிகளின் கனவுகளையும் நினைப்புகளையும் அந்த ஒரு நாளில் தவிடுபொடியாக்கி வேறொரு தீர்ப்பை எழுதிவிடுவார்கள் இந்திய தாய்த்திருநாட்டின் வாக்காள தெய்வங்கள்.

தேர்தல்

தேர்தலுக்குப் பிறகு நிச்சயமாய் தங்களைத் திரும்பி பார்க்காத தலைவர்களுக்காக சிங்கிள் டீ, பிரியாணி பொட்டலம், இத்யாதிகளுடன் திருப்திப்பட்டுக்கொண்டு வெயில் மழை பாராமல் அலைந்து தொண்டை வறள ஓட்டு சேகரிக்கும் தொண்டர்கள்.

அமைப்பை மாற்ற வேண்டும் என புரியாத வார்த்தைகளில் மாதக்கணக்கில் வாதாடிவிட்டு தேர்தலன்று ஓட்டு போடாத அறிவு ஜீவி கூட்டம்…

ஐந்து வருட ஆட்சிக் காலத்தில், நடை என்பதையே மறந்துவிட்டு, மூச்சு வாங்க பள்ளம் படுகுழிகளில் விழுந்தாலும் தலைக்கு மேலே குப்பிய கைகளை இறக்காமல் அசடு வழிந்து ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதிகளின் சாடிஸ்ட் மகிழ்ச்சியுடன் உலுப்பியெடுக்கும் மிஸ்டர் பொதுஜனம் என இந்திய தேர்தல்களின் சுவாரஸ்யத்தை அடுக்கிக்கொண்டே போகலாம் .

மேலே சொன்னவற்றுக்கெல்லாம் மேலாக, கடந்த சில தேர்தல்களாக கரைபுரண்டு ஓடும் வைட்டமின் ப -வின் சக்தி, உள்ளூர் பொருளாதாரத்தையே சில மாதங்களுக்கு உயர்த்தும் அளவுக்கு விஸ்வரூபமெடுத்து விட்டதையும் குறிப்பிட வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை முடிந்து, எரிந்த கட்சியோ எரியாத கட்சியோ, ஏதோ ஒன்று ஜெயித்து ஆட்சி அமைத்த அடுத்த நிமிடமே எல்லாமே ஒன்றாக தோன்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கும், ரியாலிட்டியே இல்லாத ரியாலிட்டி ஷோக்களுக்கும் திரும்பி விடுவோம்.

சட்டமன்றத் தேர்தல்

மழைக்கால வெள்ளம் வடிந்தவுடன் மறைந்துவிடும் மனித நேயத்தை போலவே தேர்தல் முடிந்த அடுத்த நொடியே நம் ஜனநாயக உணர்வும் கண்ணை மூடிக்கொள்ளும். திருட்டு, கொலைகள், முகமூடி கொள்ளையர்கள் பற்றிய பரபரப்பு செய்திகளுக்கு நடுவே அவ்வப்போது ஊடகங்கள் வெட்டவெளிச்சமாக்கும் ஊழல் செய்திகளைப் படிக்கும் போது மட்டும் நம் நியாயமான ஜனநாயக கோபம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும்.

சிறு வயதில் வீட்டு பெரியவர்கள் எந்தக் கட்சியோ நாங்களும் அந்தக் கட்சி. ஆதரவு, எதிர்ப்பு எனும் இரண்டு பக்க சமுதாயத்துக்கு ஏற்ப, எங்களில் பெரும்பாலான சிறுவர்கள் தி.மு.க அல்லது அ.தி.மு.க அனுதாபிகள். சுவர் விளம்பரங்களின் எண்ணிக்கையை வைத்து எங்களுக்குள் கருத்துக்கணிப்பு நடத்திக்கொள்வோம். எந்த கட்சி அதிக சுவர்களில் கட்சி சின்னத்தை வரைந்திருக்கிறதோ அந்தக் கட்சிதான் ஜெயிக்கும் என்பதான நம்பிக்கை.

ஜாதிக்கொரு கட்சிகளும் மெகா, ஜம்போ கூட்டணிகளும் தோன்றியிராத முப்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் உதயசூரியனும் இரட்டை இலையும்தான் மூலை முடுக்கு சுவர்களிலெல்லாம் தென்படும். மற்றபடி ஆங்காங்கே காங்கிரஸின் கை மற்றும் கம்யூனிஸ்ட் கதிர் அரிவாள்.

தமிழ்நாட்டில் அனைத்துக்கும் இரண்டே பக்கங்கள் தான். எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல், எம்ஜிஆர் – கருணாநிதி எனத் தொடங்கி இளையராஜா – ஏ ஆர் ரகுமான், விஜய் – அஜித் எனத் தொடரும் இந்த இரண்டு பக்கங்களுக்கு நடுவே நடுநிலையாய் இருப்பவர்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டின் ஆன்டி இந்தியர்களாகத்தான் பார்க்கப்படுவார்கள்.

பெரிய கட்சி மலைகளுடன் எங்கள் உள்ளூர் மடுக்களும் மல்லுக்கட்டும். எங்கள் ஏரியா பால்காரர் முதல் ரிக்சா சங்கத் தலைவர் வரை அவரவர் லோக்கல் வாய்ஸை ஓட்டுகளாக மாற்றி அதிர்ஷ்டத்தை சோதித்துக்கொள்ள டெபாசிட் தொகையை பனையம் வைப்பார்கள்.

Elections

தெருவின் கல்லூரி முகமும் டி.ராஜேந்தர் ரசிகருமான குணா அண்ணன், கையில் சுருட்டி பிடித்த நோட்டீசுடன் தலைமுடியை சிலுப்பி தாடியை வருடியபடி நண்பர்களுடன் சுயேச்சையாக வாக்கு வசூலிப்பார். குணா அண்ணனைப் பார்க்கும் போதெல்லாம் மெல்ல சிரித்து தலை தாழ்த்தி கடந்து போகும் அமுதா அக்காவின் வீட்டை சுற்றியே அவரது தேர்தல் பிரசாரம் நடைபெறும்.

ந்திய தேர்தல் ஆணையம் ஐந்து வருட சோம்பல் முறித்து, தேர்தல் தேதியை அறிவித்து விழிக்கும் போதே எங்கள் ஊரின் சில கோஷ்டிகளும் சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கிவிடும்.

எங்கள் தெரு முக்கு ஹனீஸ் டீ கடையில் வம்பளந்து, ராஜேந்திரன் பெட்டிக்கடையில் உட்கார்ந்து காலத்தை கொன்ற நேரம் போக மீதி பொழுதெல்லாம் ஹாஜியார் மாமா வீட்டு பெரிய திண்ணையில் சோம்பி தூங்கும் இளவட்ட கோஷ்டிக்கு தெரு பெரியவர்கள் வைத்த பெயர், திண்ணைத்தூங்கிகள்.

திண்ணைத்தூங்கிகள் எனும் கொடூரப் பெயரை சுமந்த அந்த கோஷ்டியும் தேர்தல் தேதி அறிவித்தவுடனே சுறுசுறுப்பாகிவிடும். அங்கீகரிக்கப்படாத தேர்தல் அலுவலகமாக மாறிவிடும் ஹாஜியார் மாமா வீட்டு திண்ணையிலிருந்து கட்சி கொடி தோரணங்கள் முதல் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு வரை அனைத்தும் நடந்தேறும்.

Election banner

“ஏதோ தெருப்புள்ளைகன்னு திண்ணையில எடம் கொடுத்தா எங்கிட்டெயேவா?”

தேர்தலுக்கு முதல் நாள் மாலை, தன் வீட்டுக்கு வந்த பூத் ஸ்லிப் தாள்களை தூக்கிப் பிடித்தபடி திண்ணைத்தூங்கி கூட்டத்தை பிலுபிலுவென பிடித்துக்கொண்டிருந்தார் ஹாஜியார் மாமா…

ஒவ்வொரு பூத் ஸ்லிப்புடனும் ஒரு பத்து ரூபாய் தாள் குண்டூசியால் இணைக்கப்பட்டிருந்தது.

“தப்பு நடந்துடிச்சி மாமா… வேற ஏரியாவுக்கு போக வேண்டியது… மாறிடிச்சி . பெரிசு பண்ணிடாதீங்க.”

திண்ணைத்தூங்கி கோஷ்டி கெஞ்சிக்கொண்டிருந்தது.

இன்றைய தேர்தல்களில் கோடிகளில் புரளும் வைட்டமின் ப எனக்கு முதல் முதலாக புரிந்த தேர்தல் அது.

ழக்கம் போலவே அந்தத் தேர்தலிலும் ஏதோ ஒரு பெரிய கட்சிதான் வெற்றி பெற்றது. அதிர்ஷ்டத்தைப் போலவே கையை விட்டுப்போன டெபாசிட் தொகையை பற்றியும் கவலைப்படாமல் உள்ளூர் சுயேச்சைகள் ஒன்றுமே நடக்காதது போல அவரவர் வேலைக்கு திரும்பி விட்டார்கள்.

“டெபாசிட் போகுதுடா டெபாசிட்… நாமளும் டப் கொடுத்தோம்ல!”

ராஜேந்திரன் பெட்டிக்கடையில் சிகரெட் பிடிக்கும் குணா அண்ணன் அமுதா அக்கா கடந்து போகும் போது சத்தமாய் பேசி, முடியை சிலுப்பிக்கொள்வார்.

தேர்தல் முடிந்த சில நாட்களில் எங்கள் உள்ளூர் காண்ட்ராக்டரின் ஸ்கூட்டரில் வென்ற கட்சியின் கொடி. அடுத்த சில மாதங்களில் அவருக்குக் கிடைத்த அரசு இலவச கழிப்பறை கட்டும் பணிக்கான பூர்வாங்க வேலைகளை திண்ணைத்தூங்கி கோஷ்டி செயல்படுத்திக் கொண்டிருந்தது.

Election

இன்றைய பரபர முகநூல் பகிர்வுகளிலிருந்தும், வாட்ஸ் ஆப் அலப்பறைகளிலிருந்தும், யூ டியூப் ட்ரோல்களிலிருந்தும் விலகி, தேர்தல் தகிடுதித்தங்களையும் அரசியல் அலப்பறைகளையும் நிதானமாக யோசித்தால் ஓட்டு அரசியலில் கையூட்டும் கமிசனும் காலங்காலமாக இருந்து கொண்டிருப்பது புரியும். பத்து ரூபாய் நோட்டிலிருந்து கண்ட்டெய்னர் ஸ்வீட் பாக்ஸுகள், லோக்கல் காண்ட்ரக்டரிலிருந்து பன்னாட்டு நிறுவனங்கள் என காலத்தின் மாற்றத்துக்கேற்ற வளர்ச்சி மட்டும் தான் வித்தியாசம். ஆக, அரசியலில் எதுவுமே புதிதில்லை.

தமிழ் நாட்டுக்கு மட்டுமல்லாமல் உலக அரசியல் முழுவதுக்கும் ஒத்துப்போகும் அந்த வசனத்தைக்கூட கவுண்டமணி அன்றே சொல்லிவிட்டாரே…

“அட… அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!”

காரை அக்பர்

கட்டுரை, படங்கள், தொகுதி பிரச்னை குறித்த வீடியோக்களை அனுப்ப க்ளிக் செய்க…. https://bit.ly/39BnZAJ

விகடன் தேர்தல் களம் 2021

தமிழகத் தேர்தல் களம் அனல் தகிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகமெங்கும் சுழன்று செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கிறது விகடனின் நிருபர் படை. இந்தப் பணியில் நீங்களும் இணையத் தயாரா?

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்;

தேர்தல் தொடர்பான உங்கள் ஏரியா சுவாரஸ்யங்களோ, கள நிலவரங்களோ… அரசியல் கட்சி மீதான விமர்சனங்களோ அல்லது பார்வைகளோ… தொகுதிப் பிரச்னை, தலைவர்கள் பற்றிய நினைவுகள், தேர்தல் குறித்த நாஸ்டால்ஜியா நினைவுகள் ஆகியவையோ… எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டுரை, படங்கள், வீடியோ என எதிலும் கலக்கலாம். அனுப்ப வேண்டிய லிங்க்: https://bit.ly/39BnZAJ

உங்கள் பங்களிப்புகளுக்கு இங்கே களம் அமைத்துத் தருகிறது விகடன்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://ugc.vikatan.com/election/createarticle

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.