தோல்வியை மறைக்க கடைசி நாளில் பத்திரிகைகளில் கோயபல்ஸ் பிரச்சாரம்: கே.எஸ்.அழகிரி கண்டனம்

”தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 3.41 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இதில் கடந்த மூன்றாண்டுகளில் திணிக்கப்பட்ட நீட் தேர்வின் மூலம் 13 மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேருகிற கொடுமை நிகழ்ந்தது. உள் ஒதுக்கீடு 7.5 சதவிகிதம் வந்த பிறகு, மொத்தமுள்ள 3400 இடங்களில் 405 மாணவர்களுக்குதான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுதான் சமூக நீதியா?” என கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று விடுத்துள்ள அறிக்கை:

“மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்குப் பாடம் புகட்ட, அதிமுகவின் அராஜக ஊழல் ஆட்சியை அகற்ற, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிப்பதென தமிழக மக்கள் முடிவு செய்து விட்டார்கள். தேர்தல் பிரச்சாரங்களில் பெருந்திரளான, அடர்த்தியான மக்கள் கூட்டம் அணி திரண்டு வருவதே அதற்கு சாட்சி. இதை சகித்துக்கொள்ள முடியாத அதிமுக, நாளேடுகளில் பக்கம் பக்கமாக ஆதாரமற்ற அவதூறு கருத்துகளைக் கூறி, கடைசி நாளில் கோயபல்ஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறது.

10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சாதனைகள் என்று எதையும் கூற துணிவற்ற நிலையில் இத்தகைய அவதூறு பிரச்சாரங்களில் ஈடுபடுவது பாஜக, அதிமுக கூட்டணிக்குத் தோல்வி பயம் வெளிப்பட்டு விட்டதையே வெளிப்படுத்துகிறது. பாஜக, அதிமுக கூட்டணியைத் தோற்கடிப்பதற்கு நியாயமான காரணங்களை வாக்காளர்களிடையே முன்வைக்க விரும்புகிறோம்.

திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி கூறுகிறார். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2004 முதல் 2014 வரை தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்ததை எவராவது மறுக்க முடியுமா? பாஜக ஆட்சி அமைந்த 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு 2015, 2016இல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தத் தடை விதித்தது யார்?

உச்ச நீதிமன்றம் விதித்த தடையை நீக்குவதற்கு மிருகவதை தடைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர பாஜக மறுத்தது ஏன்? ஜனவரி 2017இல் மெரினாவில் நடந்த எழுச்சிப் போராட்டத்திற்குப் பிறகுதான் அதிமுக அவசரச் சட்டம் கொண்டு வந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றதே தவிர, மத்திய பாஜக ஆட்சியினால் அல்ல. எனவே, மோடி அவர்களே, தமிழக மக்களிடம் உங்களது கோயபல்ஸ் பிரச்சாரம் எடுபடாது.

தமிழகத்தில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். தற்போது, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 66.37 லட்சம். தமிழகத்தில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு இதைவிட வேறு சான்று தேவையா ? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 9,251 பணியிடங்களுக்கு 20 லட்சம் மனுக்கள் குவிந்தன.

ஒரு வேலைக்கு 231 பேர் விண்ணப்பித்தனர். 66 டி.எஸ்.பி. பதவிகளுக்கு 1 லட்சத்து 31 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதுதான் அதிமுக அரசின் வேலைவாய்ப்பு வழங்கும் லட்சணம். தலைமைச் செயலகத்தில் 14 துப்புரவுப் பணியிடங்களுக்கு 4 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இதில், பல பொறியியல், எம்பிஏ பட்டதாரிகள் அடங்குவர். எடப்பாடி அவர்களே, இதைவிட ஒரு அவமானத்தை தமிழகத்திற்கு உங்களால் இழைக்க முடியுமா ?

உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூன்று முறை கோடிக்கணக்கான ரூபாய் செலவில் அதிமுக அரசு நடத்தியது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. தொழில்கள் தொடங்கப்பட்டு, லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வழங்கப்பட்டதாக எடப்பாடி கூறுகிறார்.

எந்த தொழிற்சாலையில் எத்தனை பேருக்கு வேலை வழங்கப்பட்டது? எடப்பாடி வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா? தமிழகத்தில் ஆண்டுதோறும் 5 லட்சம் பட்டதாரிகள், 2 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் படித்துவிட்டு வெளியே வருகின்றனர். இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க எங்கே தொழில் தொடங்கினீர்கள்? எங்கே வேலை வழங்கினீர்கள்? எடப்பாடி அவர்களே, பதில் கூறுவீர்களா ?

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 3.41 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இதில் கடந்த மூன்றாண்டுகளில் திணிக்கப்பட்ட நீட் தேர்வின் மூலம் 13 மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேருகிற கொடுமை நிகழ்ந்தது. உள் ஒதுக்கீடு 7.5 சதவிகிதம் வந்தபிறகு, மொத்தமுள்ள 3400 இடங்களில் 405 மாணவர்களுக்குதான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இதுதான் சமூக நீதியா? மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து, அதிக மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் வாய்ப்பு கிடைக்காமல் அனிதா உள்ளிட்ட 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு யார் காரணம்? யார் பொறுப்பு? நீட் தேர்வைத் தமிழகத்தில் திணித்த பாஜகவுக்குப் பாடம் புகட்ட வேண்டாமா?

குடியுரிமைச் சட்டத் திருத்தம் மாநிலங்களவையில் 11 உறுப்பினர்கள் கொண்ட அதிமுகவும், அன்புமணி ராமதாஸும் ஆதரித்ததால் சட்டமாக்கப்பட்டது. ஆனால், அதிமுக தேர்தல் அறிக்கையில், குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற பாஜகவை வலியுறுத்துவோம் என்று கூறுவதை விட இரட்டை வேடம் வேறு என்ன இருக்க முடியும்?

பாஜக அரசின் பொது முடக்கத்தினால் மாத ஊதியம் பெறுகிற 12 கோடி பேர் வேலை இழந்தனர். 7.5 கோடி பேர் வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டனர். வளர்ச்சி மைனஸ் 23 சதவிகிதம். 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரிக்கிற பிரதமர் மோடியே, தமிழக மக்களிடம் வாக்கு கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ? கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவின் வளர்ச்சி அதல பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, பொது முடக்கம், தவறான பொருளாதாரக் கொள்கை போன்றவைதான் இதற்குக் காரணம் என்பதை பிரதமர் மோடியால் மறுக்க முடியுமா?

பாஜக அரசு 2014ஆம் ஆண்டு முதல் 17 முறை கலால் வரி விதித்து ரூ.21 லட்சம் கோடி வருமானத்தைப் பெருக்கிக் கொண்டது. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றியது. பாஜக ஒரு மக்கள் விரோத அரசு என்று கூறுவதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையா? இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.93. ஆனால், சின்னஞ்சிறிய அண்டை நாடுகளான நேபாளத்தில் ரூ.76, இலங்கையில் ரூ.60, பாகிஸ்தானில் ரூ.51, பூடானில் ரூ.59. பிரதமர் மோடியே இதுதான் உங்கள் ஆட்சியின் லட்சணமா? 2014இல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.410. தற்போது ரூ.875. இதன் மூலம் 25 கோடி தாய்மார்கள் தலைமீது சுமையை ஏற்றிய பிரதமர் மோடிக்குப் பாடம் புகட்ட வேண்டாமா ?

மோடி ஆட்சியில் 100 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 2020ஆம் ஆண்டில் மட்டும் 13 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மூன்று மடங்காகவும், அதானியின் சொத்து மதிப்பு 6 மடங்காகவும் உயர்ந்திருக்கிறது.

பிரதமர் மோடியின் ஆட்சி ஒரு கார்ப்பரேட் ஆதரவு ஆட்சி என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? இந்தியாவில் உள்ள கார்ப்பரேட்டுகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக 2020இல் மொத்தம் வழங்கிய நன்கொடை ரூ.2773 கோடி. இதில் ரூ.1660 கோடி பாஜகவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கார்ப்பரேட்டுகள் பாஜகவுக்கு நன்கொடையை வாரி வழங்குவது ஏன்? மோடி பதில் கூறுவாரா?

அனைத்து மொழிகளையும் சமமாகக் கருத வேண்டிய பாஜக ஆட்சியில், சமஸ்கிருத மொழியை வளர்ப்பதற்கு கடந்த 3 ஆண்டுகளில் ஒதுக்கிய தொகை ரூ.644 கோடி. ஆனால், தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய 5 மொழிகளுக்கும் சேர்த்து ஒதுக்கிய தொகை வெறும் ரூ.29 கோடி. சமஸ்கிருதத்திற்கு 22 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கிய பிரதமர் மோடி அவர்களே, உங்களை தமிழர் விரோதி என்று அழைப்பதில் என்ன தவறு?

இந்தியாவில் சமஸ்கிருதம் பேசுபவர்கள் 28,821 பேர். ஆனால், சமஸ்கிருதத்திற்கு ரூ.644 கோடி. 7 கோடி மக்கள் பேசுகிற தமிழுக்கு நீங்கள் ஒதுக்கிய தொகை ரூ.4 கோடி. தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் நீலிக் கண்ணீர் வடிக்கும் மோடி அவர்களே, தமிழ் மொழியை வஞ்சிப்பது நியாயமா?

கடந்த 10 ஆண்டுகளில் நிவாரண நிதியாக பிரதமர் மோடியிடம் கேட்ட மொத்த தொகை ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரத்து 500 கோடி. ஆனால், பிரதமர் மோடி வழங்கியதோ ரூ.5778 கோடி. கேட்ட தொகையில் 5 சதவிகிதத்தை மட்டுமே வழங்கிய பிரதமர் மோடி அவர்களே, தமிழக மக்களிடம் வாக்கு கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ?

நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முதல்வர் எடப்பாடி மீது, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, சிபிஐ விசாரணைக்குத் தடை உத்தரவைப் பெற்று, ஆட்சியில் நீடிப்பவர் எடப்பாடி பழனிசாமி. தடை உத்தரவை நீக்காமல் உங்களை பாதுகாப்பவர் பிரதமர் மோடி. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் எடப்பாடி சிபிஐ விசாரணையிலிருந்து தப்ப முடியுமா ?

அதிமுக அரசின் மொத்த கடன் ரூபாய் 5 லட்சம் கோடி. பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூபாய் 3 லட்சம் கோடி. ஆக, 8 லட்சம் கோடி கடனில் திவாலான நிலையில் இருக்கும் போது, இலவச அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி வாரி வழங்கலாமா ? எடப்பாடி பழனிசாமி முதல்வராகும்போது அறிவிப்புகளை வெளியிடலாம். ஆனால், ஆட்சியிலிருந்து வெளியேறுகிற போது அறிவிப்புகளை வெளியிட என்ன உரிமை இருக்கிறது ? ஆட்சியில் இருக்கும்போது செய்யாததை மூடி மறைக்க இத்தகைய இலவச அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றலாமா?

10 ஆண்டுகால அதிமுக ஆட்சி தொடர்வதற்கு நியாயமான காரணங்கள் ஏதாவது ஒன்றைக் கூற முடியுமா? வாக்காளர்கள் எடப்பாடியையும், தளபதி ஸ்டாலினையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அடுத்த முதல்வராக மக்கள் யாரைத் தேர்வு செய்வார்கள் என்பதைத்தான் அனைத்து கருத்துக் கணிப்புகளும் தெளிவாகக் கூறுகின்றன. ஐம்பதாண்டு கால அரசியல், நிர்வாக அனுபவம் பெற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆவது காலத்தின் கட்டாயம்.

இதற்கு மக்களிடையே அமோக ஆதரவு பெருகி வருவதைத் தொலைக்காட்சிகளில் காண முடிகிறது. ஆட்சி மாற்றம் உறுதி என்பது நாளுக்கு நாள் தெளிவாகி வருகிறது. மத்திய பாஜக அரசின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்க, அராஜக ஊழல் ஆட்சி நடத்துகிற அதிமுக ஆட்சியை அகற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழக மக்கள் ஆதரவளிக்க வேண்டும். ஆட்சி மாற்றத்தின் மூலமே தமிழகத்திற்கு விடிவு காலம் ஏற்பட முடியும்”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.