புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுமா? உயர்மட்டக் குழுவுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

புதுடெல்லி:

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வாக்கில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. அதன்பிறகு வேகம் எடுத்த கொரோனா செப்டம்பர் மாதம் உச்சத்தை தொட்டது.

அடுத்து தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியது. கொரோனா அதிகமாக பரவிய நேரத்தில் பொதுமுடக்கம் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு இருந்தன. நோய் குறையத் தொடங்கியதால் இந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன.

கடந்த பிப்ரவரி மாதம் நோய் தாக்கம் மிகவும் குறைந்திருந்தது. எனவே நோய் முழுமையாக கட்டுக்குள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென பிப்ரவரி மாதத்திற்கு பிறகு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.

கொரோனா பரிசோதனை

இப்போது நாட்டின் பல மாநிலங்களில் நோய் தொற்று கடந்த ஆண்டு போலவே மோசமாக இருக்கிறது. இது 2-வது அலையாக மாறி இருக்கிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந் தேதி தினசரி பாதிப்பு 93 ஆயிரத்து 337 ஆக இருந்தது. அதே நிலைக்கு இப்போது தினசரி பாதிப்பு வந்திருக்கிறது. நேற்று மட்டும் நாடு முழுவதும் 93 ஆயிரத்து 249 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாளை கடந்த செப்டம்பர் மாத பாதிப்பின் எண்ணிக்கையை தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் மராட்டிய மாநிலத்தில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அங்கு மட்டும் நேற்று 49 ஆயிரத்து 447 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மொத்த பாதிப்பில் சரிபாதி அளவுக்கு மராட்டியத்தில் உள்ளது.

இதேபோல பஞ்சாப், சத்தீஷ்கர், கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி, அரியானா போன்ற மாநிலங்களிலும் பாதிப்பு மோசமடைந்து வருகிறது.

நாட்டில் உள்ள 12 மாநிலங்களில் மொத்த பாதிப்பில் 80 சதவீதம் பேர் இருக்கிறார்கள்.

தடுப்பூசி போடும் பணி

கடந்த ஆண்டின் உச்சத்தை கடக்கும் நிலையில் இப்போது பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மத்திய அரசு கவலையடைந்துள்ளது. அதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருக்கிறது.

இதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று உயர்மட்ட குழு அவசரக் கூட்டத்தை கூட்டினார். அனைத்து துறை கேபினட் செயலாளர்கள், பிரதமரின் முதன்மை செயலாளர், மத்திய சுகாதாரத் துறை செயலாளர் மேலும் கொரோனா கட்டுப்பாட்டு குழு தலைவர் வினோத்பால் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கொரோனாவை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா பரவலின் தற்போதைய நிலைமை மற்றும் தடுப்பூசி குறித்து பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். 

மராட்டிய மாநிலத்தில் நிலமை மிக மோசமாக இருப்பதால், அங்கு சிறப்பு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றியும் விவாதித்தனர்.

இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது தொடர்பாகவும், அதை இன்னும் விரைவுபடுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டனர்.

கொரோனா பரவல் தொடர்ந்து மோசமான நிலையை எட்டி வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டு வரலாமா? என்றும் விவாதித்து உள்ளனர்.

காலையில் தொடங்கிய கூட்டம் மதியம் வரை நீடித்தது. இதில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளின்படி அடுத்த கட்டுப்பாடுகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையே எய்ம்ஸ் டைரக்டரும் நிபுணர் குழு உறுப்பினருமான டாக்டர் குலேரியா கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் சிறு பொது முடக்கங்கள், பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.