வாரத்தில் 3 நாள்: மஹா.,வில் முழு ஊரடங்கு| Dinamalar

மும்பை: ‘கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், மஹாராஷ்டிராவில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது’ என, மாநில அரசு அறிவித்துள்ளது.

அதே நேரத்தில், வார இறுதியில், மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா கூட்டணி அரசு அமைந்துள்ளது. மாநிலத்தில், கொரோனா வைரஸ் பரவல் அதி தீவிரமாக உள்ளது. நாட்டிலேயே, அதிக பாதிப்பு இங்கு உள்ளது.வைரஸ் பரவலைத் தடுப்பது குறித்து விவாதிக்க, முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சரும், தேசியவாத காங்., மூத்த தலைவருமான நவாப் மாலிக் கூறியதாவது:மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப் படாது.

அதே நேரத்தில், வெள்ளிக் கிழமை இரவு, 8:00 மணி முதல், திங்கள் கிழமை காலை, 7:00 மணி வரை, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.இதைத் தவிர, இன்று முதல், இரவு, 8:00 மணி முதல், மறுநாள் காலை, 7:00 மணி வரையிலான இரவு நேர முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே இதில் விதிவிலக்கு அளிக்கப்படும்.பொது போக்குவரத்தில், அமர்ந்து செல்ல மட்டும் அனுமதிக்கப்படும். ஆட்டோ, டாக்சி மற்றும் தனிநபர் வாகனங்களில், 50 சதவீத பயணியர் மட்டும் பயணிக்கலாம்.

இன்று முதல் பகல் நேர, 144 தடை உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்படும். பெரிய வணிக வளாகங்கள், பார்கள், உணவு விடுதிகள் உள்ளிட்டவற் றில், பொருட்களை வாங்கிச் செல்ல மட்டும் அனுமதிக்கப்படும். அங்கு அமர்ந்து சாப்பிட முடியாது.அரசு அலுவலகங்கள், 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படும். தொழில் நிறுவனங்கள், காய்கறி சந்தைகள், தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் மூடப்படும். வழிபாட்டு தலங் கள், பாதுகாப்பு அம்சங்களுடன் செயல்படலாம்.

தியேட்டர்கள், நாடக அரங்கங்கள் மூடப்படும். கட்டுப்பாடுகளுடன், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக்கான படப்பிடிப்புகளுக்கு அனுமதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்டோருடன், உத்தவ் தாக்கரே பேசினார். அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.