செவ்வாய் கிரகத்தில் பறக்க தயாராகும் நவீன ஹெலிகாப்டர்

லாஸ்ஏஞ்சல்ஸ்:

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. இது செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெஸரோ பள்ளத்தாக்கு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் உயிரினங்களுக்காக கரிம படிகங்கள் இருக்கின்றனவா என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக அங்கிருந்து சிறிய அளவிலான மாதிரிகளை இந்த விண்கலம் சேகரித்து பூமிக்கு அனுப்பி உள்ளது.

இந்த விண்கலத்தில் நவீன ஹெலிகாப்டர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது பெர்சவரன்ஸ் ஆய்வு விண்கலத்துடன் 47.1 கோடி கிலோ மீட்டர் பயணம் செய்து செவ்வாய் கிரகத்துக்கு சென்றுள்ளது.

இந்த ஹெலிகாப்டர், பெர்சவரன்ஸ் ரோவரில் இருந்து இறங்கி செவ்வாய் கிரகத்தில் நிறுத்தப்பட்டுள்ள படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் பறக்க தயாராக உள்ளது. இரவு நேரங்களில் இங்கு கடும் குளிர் நிலவுகிறது.

இதனால் அங்கு ஹெலிகாப்டரில் பாகங்கள் உறைந்து பழுது ஆவதை தடுக்க இதில் வெப்பம் உண்டாக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் வெப்பத்தை உருவாக்கி பேட்டரி மூலம் இந்த ஹெலிகாப்டரை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தயாராக நிற்கும் இந்த ஹெலிகாப்டர் விரைவில் செவ்வாய் கிரகத்தில் பறக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.