கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி போடப்படும் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வந்தாலும், மற்றொரு புறம் கொரோனா வைரஸ் தாக்கமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. நாளுக்கு நாள் இந்தியாவில்  கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்வதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் சஷிகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவா நடிப்பில், 2010 ஆம் வெளியான ‘தமிழ் படம்’ மூலம் திரையுலகில் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தவர் சஷிகாந்த். இதை தொடர்ந்து ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘காவிய தலைவன்’, ‘இறுதி சுற்று’, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் இவர் தயாரித்த ‘மண்டேலா’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நேரடியாக தொலைக்காட்சியில் வெளியானது. மேலும் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வந்து கொண்டிருக்கிறது.

மேலும் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தையும் இவர் தான் தயாரித்துள்ளார். இந்த படமும் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர் சஷிகாந்த், தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து நான் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுள்ளேன். மேலும் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தயவு செய்து உடனடியாக கொரோனா வைரஸ் சோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.