சென்னை: தமிழக சட்டமன்றத்தில் 234 தொகுதிகளிலும் திட்டமிட்டபடி நாளை தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். சில தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக பரவி வரும் தகவலில் உண்மையில்லை. தமிழக சட்டப்பேரவைக்கு நாளை நடைபெறவுள்ள தேர்தலில், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 3,998 பேர் வேட்பாளர்களாக களம் காணுகின்றனர். இதில் 6,183 பேர் ஆண்கள், 1,069 பேர் பெண்கள், மூன்று பேர் மூன்றாம் பாலினத்தவர். மொத்தம் மனு தாக்கல் செய்த 7,255 பேரில் 2,806 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 451 பேர் மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர். இந்த தேர்தலில் அதிகபட்சமாக கரூரில் 77 வேட்பாளர்கள், அரவக்குறிச்சியில் 40 வேட்பாளர்கள், குறைந்தபட்சமாக பவானிசாகர் மற்றும் வால்பாறையில் ஆறு வேட்பாளர்கள் களம் காணுகிறார்கள்.இந்த நிலையில், சில தொகுதிகளில் தேர்தல் ரத்தாகும் என தகவல் பரவிய நிலையில் தற்போது தமிழக சட்டமன்றத்தில் 234 தொகுதிகளிலும் திட்டமிட்டபடி நாளை தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார். 7 தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவும் தகவலுக்கு தலைமை தேர்தல் அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார். பணப்பட்டுவாடா புகார்களால் 7 தொகுதிகளில் தேர்தல் ரத்தாகும் என்பது வதந்தியே. அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் தயாராக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
