தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை  வாக்குப்பதிவு நடைபெற உள்ளது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கடைசி ஒருமணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பதற்றமான 10,813 வாக்குச்சாவடிகள், மிக பதற்றமான 537 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். 6.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் 3.09 கோடி ஆண்கள், 3.19 கோடி பெண்கள், 7,192 திருநங்கைகள் ஆகியோர் நாளை வாக்களிக்க உள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் வாக்குச்சாவடிகளில் என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.                                                                    

1. வாக்களிக்கச் செல்லும் பொழுது கண்டிப்பாக அனைவரும் முகக் வசம் அணிந்து புதிய வாக்காளர் அடையாள அட்டை  எடுத்து செல்ல வேண்டும். (FFG , ZVA போன்ற மூன்று ஆங்கில எழுத்தில் ஆரம்பிக்கும் வாக்காளர் அடையாள   அட்டை) (இல்லாதவர்கள் ஆதார் உட்பட  11 இதர அடையாள ஆவணங்களை எடுத்துச் செல்லலாம்)

2. வாக்குப்பதிவின் போது  வரிசையில்  சமூக இடைவெளியுடன் நிற்க வேண்டும்.

3. வாக்களிப்பதற்கு முன்பு அனைவருக்கும் Hand Sanitizer கொடுக்கப்பட்டு பின்பு தெர்மோ மீட்டர் கொண்டு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும். அதன் பின்னர் அனைவருக்கும் கையுறை வழங்கப்படும். 

4. வாக்காளர் உடல் வெப்பநிலை சராசரியை விட அதிகமாக இருந்தாலோ, கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, கொரோனா சிகிச்சை முடிந்து தனிமையில் இருந்தாலோ, அவர்கள் மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்குச்சாவடிக்கு  சென்று தக்க பாதுகாப்பு உடையுடன் வாக்களிக்கலாம். 

5.வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு நுழைவதற்கு முன்பு தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வலது கை உறையை  முழுமையாக அணிந்துகொண்டு முதலாம் தேர்தல் அலுவலரிடம் உங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குச் சீட்டு  மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு சென்று காண்பிக்க வேண்டும்.

 உங்களுடைய அடையாளத்தை உறுதி செய்த பின்பு முதலாவது தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்காளர் பெயர், பாகம் எண், வரிசை எண்ணை உரத்த குரலில் கூறுவார். இதனை தேர்தல் முகவர்கள் உறுதி செய்த பிறகு நீங்கள் இரண்டாவது தேர்தல் அலுவலரிடம் சென்று 17 A ரிஜிஸ்டரில் கையொப்பமிட்டு, உங்களுடைய இடதுகை ஆள்காட்டி விரலில் அழியாத மை வைக்க வேண்டும். பிறகு அவர் உங்களுக்கு ஓட்டளிக்க ஓட்டுச்சீட்டை வழங்குவார். அதை பெற்றுக்கொண்டு 3வது தேர்தல் அலுவலர் இடம் சென்று அந்த ஓட்டுச்சீட்டை கொடுத்த பின்பு அவர் உங்களுக்கு  வாக்களிக்க அனுமதி வழங்கப்படும். 

நீங்கள் வாக்களிக்கும் இடத்திற்கு சென்று உங்களுடைய கையுறை அணிந்த வலது கை விரல்களால் உங்களுக்குரிய வேட்பாளர் பட்டனை அழுத்தி பீப் சத்தம் வருவதையும், வேட்பாளருக்கு அருகிலுள்ள சிகப்பு விளக்கு எரிவதையும், அருகிலுள்ள விவிபேட் இயந்திரத்தில் நீங்கள் வாக்களித்த வேட்பாளரின் சின்னம் பிரிண்ட் செய்யப்பட்டு 7 வினாடிகள்   காண்பிக்கப் படுவதையும் உறுதி செய்யலாம். 

6. வாக்களித்த பின்னர்  வாக்குசாவடி மையத்தின் வெளியே நீங்கள் அணிந்துள்ள வலது கையுறையை கழட்டி அதற்குரிய பிளாஸ்டிக் குப்பை பையில் போட்டுவிட்டு வாக்குச்சாவடி மையத்தை விட்டு வெளியேற வேண்டும்.

7. வாக்குச் சாவடிக்குள் வாக்குச்சாவடி தலைமை அலுவலரைத்தவிர வாக்காளர்கள், தேர்தல் முகவர்கள் என யாரும் செல்போன் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.