பாகிஸ்தான் பேட்ஸ்மேனின் கவனத்தைத் திசை திருப்பினாரா டி காக்?: ஒருநாள் ஆட்டத்தில் சர்ச்சை (விடியோ)

 

பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஃபகார் ஸமானின் கவனத்தைத் திசை திருப்பி அவரை ஆட்டமிழக்கச் செய்ததாக தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர்  டி காக் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, 6 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள் குவித்தது. கேப்டன் பவுமா 92, டி காக் 80, வாண் டர் டுசன் 60, டேவிட் மில்லர் 50 ரன்கள் எடுத்தார்கள். இதன்பிறகு விளையாடிய பாகிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தொடக்க வீரர் ஃபகார் ஸமான் கடைசி வரை போராடி 193 ரன்கள் எடுத்துக் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 31 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது முதல் பந்தை லாங் ஆஃப்புக்கு அனுப்பிய ஃபகார், 2-வது ரன்னை ஓடியபோது த்ரோவை பந்துவீச்சாளரிடம் அனுப்புமாறு சைகை காண்பித்தார் விக்கெட் கீப்பர் டி காக். இதனால் ஓடி வந்துகொண்டிருந்த ஃபகார், டி காக்கின் சைகையால் த்ரோ அந்தப் பக்கம் வரவில்லை என எண்ணிக்கொண்டார். மறுமுனையில் பேட்ஸ்மேன் சென்றுவிட்டாரா எனத் திரும்பிப் பார்த்ததோடு தனது வேகத்தையும் குறைத்துக்கொண்டார். ஆனால் ஃபீல்டர் வீசிய த்ரோ, டி காக்கிடம் நேராக வந்து ஸ்டம்பை வீழ்த்தியது. இதனால் எதிர்பாராதவிதத்தில் 193 ரன்களில் ரன் அவுட் ஆனார் ஃபகார். 

இதையடுத்து 2-வது ரன்னை ஃபகார் எடுத்தபோது மறுமுனையில் சைகையைக் காண்பித்து அவருடைய கவனத்தை டி காக் திசை திருப்பி விட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பந்து தன் பக்கம் வருவது தெரிந்தும் மறுமுனையில் சைகை காண்பித்ததால் அதைப் பார்த்து ஃபகார் வேகமாக ஓடுவதைக் குறைத்துக்கொண்டார் என டி காக்கின் நடவடிக்கைக்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனினும் டி காக் மீது நடுவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. 

டி காக் சர்ச்சை (12.51 நிமிடம் முதல்)

 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.