புனே: இரவு நேர பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்த 2 ஆயிரம் பாலியல் தொழிலாளர்கள்!

மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் 5-ம் தேதியிலிருந்து இரவு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப நகரமாக கருதப்படும் புனேயில் கடந்த சில நாள்களுக்கு முன்பே மாலை 6 மணியில் இருந்து காலை 7 மணி வரை ஒரு வாரத்திற்கு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மும்பை, புனே, நாக்பூர் போன்ற நகரங்களில்தான் அதிகப்படியான கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.

புனேயில் உள்ள புதுவார் பேட்டில் நாட்டிலேயே மிகப்பெரிய பாலியல் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்தப் பாலியல் விடுதியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பாலியல் தொழிலாளர்கள் இருக்கின்றனர். ஏற்கெனவே கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடினர்.

புனே திரும்பிய நேபாள் பாலியல் தொழிலாளர்கள்

பெரும்பாலான பாலியல் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர். கடந்த சில மாதங்களாகத்தான் அனைத்து தொழிற்சாலைகளும் திறக்கப்பட்டு அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் பணிக்குத் திரும்பினர். அந்த வகையில் சொந்த ஊர்களுக்குச் சென்ற பாலியல் தொழிலாளர்களில் 70% பேர் புனே திரும்பிவிட்டனர்.

தற்போது மீண்டும் தினமும் கொரோனா அதிகரித்து வருவதால், மீண்டும் இரவு நேர பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மறுபடியும் முழுமையான பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்ற அச்சத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் தங்களது சொந்த மாநிலங்களுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

இதனால் புனே பாலியல் விடுதி பாலியல் தொழிலாளர்கள் மீண்டும் வருமானம் இல்லாமல் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பகல் நேரத்தில் வேலைசெய்யும் தொழிலாளர்கள், இரவில் பாலியல் விடுதிக்குச் செல்வது வழக்கம். ஆனால் இப்போது இரவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து பாலியல் தொழிலாளி ஒருவர் கூறுகையில், ‘பகலைவிட இரவு நேரத்தில்தான் எங்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும். இரவு கட்டணமும் அதிகம். இப்போது இரவு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு இருப்பதால் யாரும் பாலியல் விடுதிகளுக்கு வருவதில்லை. இதனால் வருமானத்திற்கு வழியில்லாமல் சாப்பாட்டுக்குக்கூட திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது’ என்றார். பாலியல் தொழிலாளர்களின் நலனுக்காகச் செயல்படும் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி தேஜஸ்வி இது குறித்து கூறுகையில், ‘பொருளாதார நெருக்கடி பாலியல் தொழிலாளர்களையும் கடுமையாக பாதித்துள்ளது.

பாலியல் தொழிலாளர்கள்

வாடிக்கையாளர்களிடம் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் பாலியல் தொழிலாளர்களும் தங்களது கட்டணத்தைப் பாதியாகக் குறைத்துவிட்டனர். தற்போதுதான் ஓரளவு சம்பாதிக்க ஆரம்பித்தனர். ஆனால் மீண்டும் இரவு நேர பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது பாலியல் தொழிலாளர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது’ என்றார்.

புனே மட்டுமல்லாது மும்பை காமாட்டிபுரா பாலியல் விடுதியிலும் பாலியல் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து வருகின்றனர். கொரோனா காலத்தில் புனே பாலியல் விடுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் பெரும்பாலான பாலியல் தொழிலாளர்கள் வேறு தொழிலுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாற்று வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதில் அரசின் பங்களிப்பும் அவசியம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.