மு.க.ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடர ஒப்புதல் அளிக்க முடியாது – அட்டர்னி ஜெனரல் மறுப்பு

புதுடெல்லி:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் ஆங்கில செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு கடந்த 23-ந் தேதி பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ‘பல்வேறு மாநிலங்களில் பெரும்பான்மை பலம் பெற்ற ஆட்சியையும் பா.ஜ.க. கவிழ்த்துள்ளது. மத்திய அரசு ஜனநாயக ரீதியில் இயங்கவில்லை. நாடாளுமன்றத்தில் பலம் பொருந்தியதாக பா.ஜ.க உள்ளது. சி.பி.ஐ., வருமான வரித்துறை, தேர்தல் கமிஷன், சுப்ரீம் கோர்ட்டையும் கூட மத்திய அரசு பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது’ என குற்றம் சாட்டினார்.
கோப்புபடம்
இதில் மக்களை அச்சுறுத்த சுப்ரீம் கோர்ட்டை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது என ஸ்டாலின் தெரிவித்திருப்பது சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் செயல் எனவும், அதன் சுதந்திரத்தன்மை அதிகாரத்தை தரம் தாழ்த்துவதாக உள்ளதாகவும் என்.மாதவி என்ற வக்கீல் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலுக்கு கடிதம் எழுதினார்.
எனவே இந்த கருத்துக்காக மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என கடிதத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவரது கடிதத்துக்கு அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் இ-மெயிலில் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இது போன்ற பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். வாக்குகளை பெறும் நோக்கில் தெரிவிக்கப்படும் இதுபோன்ற கருத்துகளை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அப்படி கோர்ட்டுக்கு எதிராக தெரிவிக்கப்படும் கருத்துகளை பெரிதாக எடுத்துக் கொண்டால் அனைத்தையும் பரிசீலிக்க வேண்டிவரும்.
நீதிமன்றத்துக்கு எதிராக தெரிவிக்கப்படும் கருத்துகள், சுப்ரீம் கோர்ட்டின் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையை கடுமையாக சீர்குலைக்கும் போது மட்டுமே கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் வழங்க முடியும்.
ஆனால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர வேண்டிய நிகழ்வு இது இல்லை. எனவே மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் வழங்க முடியாது
இவ்வாறு அந்த பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.