மேற்குவங்க தேர்தலில் ஒரு காலுடன் வெற்றிபெறுவேன், இனிமேல் இரண்டு கால்களுடன் டெல்லியிலும் வெற்றிபெறுவேன் என மம்தா பானர்ஜி கூறினார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெற்றது. 2-ம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற்றது. இன்னமும் 6 கட்டத் தேர்தல்கள் நடைபெற வேண்டும்.
இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.
அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் ஹூக்லியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி இன்று பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:
மேற்குவங்க தேர்தலில் போட்டியிட பாஜகவுக்கு சொந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் கிடைக்கவில்லை. அவர்களின் வேட்பாளர்கள் ஒன்று திரிணாமுல் காங்கிரஸில் இருந்து வாங்கப்பட்டவர்கள் அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வாங்கப்பட்டவர்களாக உள்ளனர்.
அவர்கள் குழாயில் இருந்து தண்ணீரை தெளிப்பதுபோல பணத்தை வாரி இறைக்கின்றனர். தங்க வங்காளம் (சோனார் பெங்கால்) என்று பாஜக முழக்க மிடுகிறது. ஆனால் அதனை கூட சரியாக உச்சரிக்க முடியவில்லை. இவர்களால் மேற்கு வங்காளத்தை ஆட்சி செய்ய முடியாது.
மேற்குவங்க தேர்தலில் ஒரு காலுடன் வெற்றிபெறுவேன், இனிமேல் இரண்டு கால்களுடன் டெல்லியிலும் வெற்றிபெறுவேன்.
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்த காரணம் என்ன. இது பாஜக அரசால் செய்யப்பட்டது. தற்போதைய கரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் தேர்தலை குறுகிய காலத்திற்குள் முடிக்கக்கூடாதா. ஆனால் பாஜகவின் விருப்பப்படி தேர்தல் ஆணையம் நடந்து கொள்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.