
தமிழகத்தில் தேர்தல் நடைபெற்று முடிந்தாலும் பல்வேறு கட்சி வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளிலும், தங்கள் வீடுகளிலும் தனிமைப்பபடுத்திக்கொண்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்த நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு நிர்வாகிகளுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டோன் புஷ்பராஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வேலூரில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று வாக்குப்பெட்டி இயந்திரங்கள் வைக்கும் அறைக்கு சீல் வைக்கப்படும் போது காய்ச்சல் அறிகுறி தென்பட்டதால் நேற்று இரவே சிஎம்சி மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆட்சியர் அலுவலகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
newstm.in