புதுடில்லி : ‘காரில் தனியாக பயணிக்கும் நபரும் முக கவசம் அணிய வேண்டியது கட்டாயம்’ என, டில்லி உயர் நீதிமன்றம், உத்தரவு பிறப்பித்தது.
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. இந்நிலையில், மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, காரில் தனியாக செல்லும் நபரும், முக கவசம் அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. மீறுவோருக்கு, அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மாநில அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக, டில்லி உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள் முறையிட்டனர். அவர்களின் மனுக்கள், நீதிபதி பிரதிபா சிங் அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.அப்போது, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘சுகாதாரம் மாநில பட்டியலில் வரும். எனவே, இதில் டில்லி அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்’ என்றார்.

பின், நீதிபதி பிரதிபா சிங் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்தில், முக கவசம் அணிய வேண்டியது கட்டாயம். தடுப்பூசி செலுத்தி இருந்தாலும், இல்லாவிட்டாலும், முக கவசம் அணிய வேண்டும்.கொரோனா வைரசால் நாம் பாதிப்படையாமல் இருக்க, நமக்கான பாதுகாப்பு கவசமாக, முக கவசம் உள்ளது. எனவே, காரில் தனியாக செல்லும் நபரும் முக கவசம் அணிய வேண்டும் என, டில்லி அரசு பிறப்பித்த உத்தரவில், எங்களால் தலையிட முடியாது. காரில் ஒருவர் இருந்தாலும், முக கவசம் அணிய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement