மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த 27-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.
ஆனால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2-ம் தேதி சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்துவந்தார்.
இந்நிலையில், தனது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் இருந்து டெண்டுல்கர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தனது வீடு திரும்பியுள்ளார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய போதும் சச்சின் டெண்டுல்கர் இன்னும் சில நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள உள்ளார்.
கொரோனா வைரசால் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த டெண்டுல்கர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.