மருத்துவம் சாராத காரணங்களுக்கு தனியாருக்கு (சுற்றுலா பயணிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர்) ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு ஜிப்மரில் வசூலிக்கும் ரூ.2400 தொகை அதிகமாக உள்ளதால் அதை ரூ.500 ஆக குறைக்க வேண்டும் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
கரோனா அதிகரிப்பால் உமிழ்நீர் பரிசோதனை, மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரிக்கவும் அரசு நிர்வாகத்துக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்துப் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவு விவரம்:
புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் ஜிப்மர், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி கரோனா மையங்களில் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளும் கரோனா மருத்துவம் செய்யும் வகையில் நிறையப் படுக்கைகளை வைத்திருக்கவேண்டும். கரோனா பாதித்தோர் தங்கப் படுக்கைகள் இல்லாமல் சிரமப்பட வேண்டிய சூழல் ஏற்படும் முன்பே, மருத்துவத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கரோனா தாக்கம் அதிகரிக்கக் காரணம், மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதது, கைகளைக் கழுவாதது, தனிமனித இடைவெளி விடாததுதான். மக்களுக்கு இதை அறிவுறுத்துவது அவசியம். நகரங்களில் முகக்கவசம் இல்லாமல் சென்றால் அறிவுறுத்துவது அவசியம்.
தைப் புதுச்சேரி அரசு நிர்வாகம் முறையாகச் செய்ய வேண்டும். தற்போது கரோனா தாக்கத்தைக் குறைக்க முக்கிய வழி கரோனா பரிசோதனையை அதிகரிப்பதுதான் உமிழ்நீர் பரிசோதனையை அதிகப்படுத்தினால்தான் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும். கரோனா பரிசோதனைகள் குறைவாகச் செய்யப்படுவதை அதிகரிக்க வேண்டும்.
மருத்துவம் சாராத காரணங்களுக்காக ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு கர்நாடகம், மகாராஷ்டிராவில் ஒருவருக்குப் பரிசோதனை செய்ய ரூ. 600 செலவாகிறது. ஜிப்மரில் இப்பரிசோதனைக்கு ரூ.2,400 கேட்கிறார்கள். இது அதிகப்படியானது. ஆர்டிபிசிஆர் கிட்டின் இன்றைய விலை ரூ.140 தான்.
இதனால் ஆர்டிபிசிஆர் தனியார் பரிசோதனைக் கட்டணத்தை ரூ. 500 ஆகக் குறைக்க வேண்டும். வெளிமாநிலங்களுக்குச் செல்வோருக்கு, சுற்றுலாப் பயணிகளுக்கு, மாணவ, மாணவிகளுக்குக் கரோனா நெகட்டிவ் சான்று தேவைப்படுவதால், அதிகக் கட்டணத்தால் அவர்கள் அவதிப்படுகின்றனர்.
புதுச்சேரி மக்களுக்கு தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என்று அறிவித்ததைப்போல், ஆர்டிபிசிஆர் பரிசோதனையை இலவசமாகச் செய்தால் புதுச்சேரி மக்கள் பயன்பெறுவர். கரோனா இரண்டாவது தாக்கம் வருவதால், அதற்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.