தமிழக சட்டமன்ற தேர்தல் அமைதியான முறையில் கடந்த 6ம் தேதி நடந்து  முடிந்தது. அதேவேளையில் மக்கள் அனைவரும் பெருமளவில் ஒன்று கூடியது, முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாத்தாலும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் தீவிரமடைய ஆரம்பித்தது. சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தில் செயல்படும் சில்லறை வியாபார காய்கனி அங்காடிகள் மட்டும் ஏப்ரல் 10ம் தேதி முதல் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொது மக்களின் உடல் வெப்ப நிலை (Thermal scanning) பரிசோதனை செய்யப்படுவதையும், கை சுத்திகரிப்பான் (Hand sanitizer) உபயோகப்படுத்துவதையும், முகக் கவசம் அணிவதையும் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்து, அனுமதிக்க வேண்டும் முக் கவசங்கள் அணியாமல் இருப்பவர்களை கட்டாயமாக அனுமதிக்கக் கூடாது. ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் கண்டிப்பாக பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, மத்திய அரசு அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளுக்கு ஏற்ப தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை தொழிற்சாலை நிருவாகம் செய்ய வேண்டும் மேலும், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை முறையாக பின்பற்றாத தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள், இந்தப் பகுதிகளிலிருந்து வெளியில் வராத வகையில், காவல் துறை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களைக் கொண்டு 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படும், இந்தப் பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளித்தல் உள்ளிட்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதோடு, நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு உதவி புரிய தன்னார்வலர்களும் நியமிக்கப்படுவர் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.