தமிழக அரசு கரோனா கட்டுப்பாடுகளை அறிவித்ததால் முன் போல் ஊரடங்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் சொந்த ஊர்களுக்கு மீண்டும் செல்ல வடமாநில தொழிலாளர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களைத் தடுத்து மதுரையில் நடக்கும் நத்தம் பறக்கும் மேம்பாலம், வைகை ஆற்று பாலம் மற்றும் ஸ்மார்ட் சிட்டிப்பணிகள் தடையின்றி நடக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது மாநகராட்சிகளில் ‘ஸ்மார்ட் சிட்டி’பணிகள் நடக்கிறது. மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய சாலைகள், பறக்கும் பாலம், உயர்மட்டம் பாலம், தரைப்பாலம் கட்டுமானப்பணி நடக்கிறது.
கடந்த காலத்தில் இதுபோன்ற அரசு கட்டுமானப்பணிகளில் உள்ளூர் தொழிலாளர்களே ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது அவர்கள், மேம்பாலம், சாலைப்பணி போன்ற கடினமான பணிகளுக்கு வர மறுக்கின்றனர். அவர்கள் வீட்டு கட்டுமானப்பணிகள், விவசாயப்பணிகளுக்கு செல்லவே ஆர்வம் காட்டுகின்றனர். அதனால், ஒப்பந்ததாரர்கள், மேற்குவங்கம், பிஹார், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், அஸ்ஸாம் போன்ற வடமாநிலங்களில் இருந்து இடைத்தரகர்கள் மூலம் குடும்பத்தோடு வரவழைத்து அவர்களை மத்திய, மாநில அரசு சார்பில் நடக்கும் கட்டுமானப்பணிகளுக்கு பயன்படுத்துகின்றனர். அந்தத் தொழிலாளர்களும் குடும்பத்தோடு வந்துவிடுவதால் அவர்கள் நிரந்தரமாக பணிமுடியம் வரை தங்கி முடித்துச் செல்கின்றனர்.
மதுரையில் தற்போது நத்தம் பறக்கும் பாலம், வைகை ஆறு தரைப்பாலம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி பணிகள், புதிய சாலை அமைக்கும் பணிகள் நடக்கிறது.
இப்பணிகளில் முழுக்க முழுக்க வடமாநில த்தொழிலாளர்களே பணிபுரிகின்றனர். அதனால், முன்பு சென்னை, கோவை, ஓசூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மட்டுமே நிறைந்திருந்த வடமாநிலத் தொழிலாளர்கள், தற்போது மதுரை போன்ற கிராமங்கள் நிறைந்த நகரங்களில் கூட கட்டுமானப்பணிகளுக்கு அதிகளவு வரத்தொடங்கிவிட்டனர்.
கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு போட்ட நேரத்தில் ஒட்டுமொத்தமாக வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி சென்றுவிட்டனர். அதனால், பெரியார் பஸ்நிலையம் கட்டுமானப்பணிகள், ஸ்மார்ட் சிட்டி சாலைப்பணிகள், நத்தம் பறக்கும் சாலைப்பணிகள் 6 மாதத்திற்கு மேல் முடங்கியது.
அதன்பிறகு அதிகாரிகள், கெஞ்சி கூத்தாடி டெண்டர் எடுத்தவர்கள் மூலம் திரும்பிச் சென்ற வடமாநிலத் தொழிலாளர்களை மதுரைக்கு வரவழைத்தனர். அப்படியிருந்தும் திரும்பிச் சென்ற 50 சதவீதம் தொழிலாளர்கள் இன்னும் மதுரைக்கு வரவே இல்லை.
அதனாலேயே, ஸ்மார்ட் சிட்டி பணிகள், வைகை ஆறு தரைப்பாலம், நத்தம் பறக்கும் பாலம் பணிகள் மந்தகதியில் நடக்கின்றன. கடந்த ஆண்டு அக்டோபரிலேயே திறக்க வேண்டிய பெரியார் பஸ்நிலையம் கட்டுமானப்பணிகள் இன்னும் முடியவில்லை.
இந்த பஸ்நிலையம் எப்போது திறக்கும் என்பது இன்னும் தெரியவில்லை. பயணிகளும், பஸ்டிரைவர்களும் பஸ்நிலையம் இல்லாமல் தினமும் பெரியார் பஸ்நிலையம் பகுதியில் திண்டாடுகின்றனர்.
மழைக்காலத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வெயில் காலத்தில் கடுமையான வெயிலும் புழுதியும் சேர்ந்து பறக்கிறது. அதனால், மக்கள் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நீண்ட நேரம் சாலையோரம் பகுதியில் காத்திருக்க முடியாமல் சிரமம் அடைந்துள்னர்.
அதுபோல், நத்தம் பறக்கும்பாலம் கட்டுமானப்பணி தொடங்கி 3 ஆண்டுகளாகிவிட்டன. ஆனால், தற்போது வரை முடியவில்லை. இப்பணியால் நத்தம் சாலை குண்டும், குழியுமாக பயணிக்கவே அச்சமாக உள்ளது.
ஒரு முறை இந்த சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுவந்தால் வாகன ஓட்டிகள் உடல் முழுவதும் புழுதி படிந்துவிடுகிறது. மூச்சு திணறலும் வந்துவிடுகிறது. பாலம் பணியால் அக்கம், பக்கத்தில் உள்ள குடியிருப்புகளில் புழுதிப்போய் படிந்து வீட்டிற்குள் குடியிருக்க முடியவில்லை.
இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் பெரும்பாலானவர்கள் தற்போது அறிவித்துள்ள கரோனா கட்டுப்பாடுகளால் அச்சமடைந்து சொந்த ஊர்களுக்கு திரும்புவதாக பேசி வருகின்றனர்.
இதை இந்தப் பணியை டெண்டர் எடுத்தவரின் தனிப்பட்ட பிரச்சினையாக கருதாமல் மாவட்ட நிர்வாகம் தலையீட்டு வடமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளித்து அவர்களை சொந்த ஊர் திரும்பவிடாமல் தடுத்து தொடர்ந்து பாலம் பணி தடையின்றி நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதில் மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டினால் மதுரையில் மேம்பாலம், சாலைப்பணிகள் முடங்கி போக்குவரத்து நெரிசல் முக்கிய சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மாறிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.