”மணிரத்னத்தின்‘ பொன்னியின் செல்வன்’படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்க வேண்டும் என்பது மணிரத்னத்தின் பெருங்கனவு. தற்போதுதான், அந்தக் கனவுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் மணிரத்னம். கடந்த 2019 ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தின் அறிவிப்பு வெளியானது. கார்த்தி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, விக்ரம், பேபி சாரா, த்ரிஷா உள்ளிட்ட பெரும் பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகின்றனர். ஆதித்த கரிகாலனாக நடிகர் விக்ரமும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்கிறார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
சமீபத்தில்தான் பிருந்தா மாஸ்டர் நடனம் அமைக்க ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அனைத்து நடிகர்களையும் வைத்து பிரம்மாண்டப் பாடல் காட்சி எடுக்கப்பட்டது. தாய்லாந்து, பாண்டிச்சேரியைத் தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ‘சுல்தான்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் காத்தியும் ராஷ்மிகா மந்தனாவும் வீடியோ கால் சாட்டில் இன்ஸ்டாகிராம் லைவ்வில் இன்று உரையாடினர்.
#PonniyinSelvan planing for Pongal 2022 release??
70% of the shooting was completed… pic.twitter.com/HNejoNgnqu— AmuthaBharathi (@iam_ravifan) April 8, 2021
அப்போது, பொன்னியின் செல்வன் குறித்து கேட்ட ராஷ்மிகாவிடம் “பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துவிட்டது. படத்தை வரும் 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். அதுவும், இந்தியாவில் கொரோனா பரவலைப் பொறுத்துதான் படம் வெளியாகும்” என்று கூறியிருக்கிறார் கார்த்தி. அவரின் இந்த அப்டேட்டால் ’பொன்னியின் செல்வன்’ நாவலை படித்தவர்கள், மணிரத்னத்தின் ரசிகர்கள் என பலரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.