மீண்டும் கட்டுப்பாடு – தியேட்டர்களில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி : திரைத்துறைக்கு மீண்டும் ஒரு சவால்

மீண்டும் கட்டுப்பாடு – தியேட்டர்களில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி : திரைத்துறைக்கு மீண்டும் ஒரு சவால்

08 ஏப், 2021 – 13:40 IST

2020ம் வருடம் மார்ச் மாதத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா மீண்டும் இந்த வருடத்தில் மார்ச் மாதக் கடைசியில் இருந்து நாளுக்கு நாள் அதிகம் பரவ ஆரம்பித்துள்ளது. அது போன்றதொரு நிலைமை இப்போது வந்துள்ளது. அதோடு மீண்டும் 50 சதவீதம் மட்டுமே தியேட்டர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது திரைத்துறைக்கு ஒரு சவாலாக அமைந்துள்ளது.
கடந்த சில தினங்களாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இந்நிலையில் கார்த்தியின் சுல்தான், தனுஷின் கர்ணன் படங்கள் தியேட்டர்களுக்கு மீண்டும் மக்களை வரவழைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ‘சுல்தான்’ படம் வெளிவந்து மூன்று நாட்கள் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வந்தனர்.
அதற்கடுத்து நேற்று முன்தினம் தேர்தல் நடந்ததால் அதற்கு முந்தைய தினமும் தேர்தல் முடிந்த மறுநாளான நேற்றும் தியேட்டர்களில் மக்கள் வரவில்லை. தேர்தல் நாளன்று நிலைமை இன்னும் மோசம். இருப்பினும் ‘சுல்தான்’ வசூல் திருப்திகரமாக இருப்பக அதன் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.
மக்களிடையே மீண்டும் கொரோனா பயம் பரவ ஆரம்பித்துள்ளதால் தியேட்டர்கள் பக்கம் வருபவர்களின் எண்ணிக்கை மீண்டும் குறைந்து வருகிறது. இருப்பினும் நாளை தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ படம் வெளியாகிறது. கொரோனா பயத்தையும் மீறி ரசிகர்கள் இப்படத்திற்கு வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கும் முன்பதிவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம். படம் நாளை வெளியாவது உறுதி என்று தெரிவித்துவிட்டார்கள். தனுஷ் ரசிகர்கள் படத்தைப் பார்க்க வந்துவிடுவார்கள், குடும்பத்தோடு பார்க்க மக்கள் வந்தால் தான் வசூல் அதிகமாக இருக்கும். அவர்களும் வருவார்களா என்பது அடுத்த நாட்களில் தெரிந்துவிடும்.
இதனிடையே மீண்டும் பல கட்டுப்பாடுகளை தமிழக அரசு இன்று(ஏப்., 8) விதித்துள்ளது. அதன்படி தியேட்டர்களில் மீண்டும் 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இதனால் திரைத்துறைக்கு மீண்டும் ஒரு சவாலான சூழல் உருவாகி உள்ளது. சற்றுமுன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதால் கர்ணன் படம் வெளியாகுமா அல்லது 50 சதவீதம் இருக்கைகளிலேயே படத்தை திரையிட முன்வார்களா என்பது இன்றைக்குள் தெரிந்துவிடும்.
இந்த மாதம், அடுத்த மாதம் சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன. ஆனால் தியேட்டர்களில் மீண்டும் 50 சதவீதம் இருக்கை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நோய் இன்னும் தீவிரமானால் ஊரடங்கு விதிக்கப்பட்டால் அவற்றின் வெளியீட்டில் மாற்றங்கள் வரலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.