கொரோனா மீண்டும் தமிழகத்தில் அதிகளவில் பரவி வருவதால், தமிழக அரசு ஏற்கனவே திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுத்த நிலையில், தற்போது மீண்டும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என அதிரடி உத்தரவு போட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், தமிழகத்தில் பரவத் தொடங்கிய கொரோனா அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் போடப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக வழிபாட்டு தளங்கள், மால்கள், காய்கறி கடைகள், மளிகை கடைகள், திரையரங்குகள் போன்றவை முழுமையாக மூடப்பட்டன.  பலர் வேலை வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

குறிப்பாக மற்றவர்களை விட கொரோனா பிரச்சினையால் திரைத்துறை கடுமையான பாதிப்புகளை சந்தித்தது, திறக்கப்படாத தியேட்டர்கள், முழுமையாக முடிந்த பிறகும் வெளிவர வரமுடியாத திரைப்படங்கள், பாதியில் நிறுத்தி வைக்கப்பட்ட படங்கள் என பல பிரச்சினைகள் திரைத்துறையை சேர்ந்தவர்களை சுழட்டி அடித்தது.  மேலும் கடன் வாங்கி படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பலரும், நடிகர் நடிகைகளிடம் சம்பளத்தை குறைத்துக் கொள்ளும்படி கூறும்  சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு சற்று தணிந்த நிலையில், மெல்ல மெல்ல தளர்வுகளை அறிவித்து வந்த தமிழக அரசு, நவம்பர் 10ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க உத்தரவிட்டது.  மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து திரையரங்குகளும் பின்பற்ற வேண்டும் என கூறியிருந்தது.  இந்நிலையில் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்கிவந்த திரையரங்குகள், ஜனவரி 15 ஆம் தேதிக்கு மேல் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. 

தற்போது வரை 100  சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்கி வரும் நிலையில், மீண்டும் கொரோனா பாதிப்பு தலைதூக்கி வருவதால் இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் மீண்டும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.