யாழ் மாநகர சபையில் விடுதலைப்புலிகளின் காவல்துறையின் சீருடையா? வெடித்தது சர்ச்சை! நாகரீகமற்ற சிலர்

யாழ். மாநகர சபை காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு மாநகர சபைக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்தோடு, காவல் படையின் சீருடையைப் பெற்று அதனை கொழும்புக்கு கொண்டுவரவும் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாவும் வெற்றிலை துப்பினால் 2 ஆயிரம் ரூபாவும் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளதாக மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேற்று அறிவித்திருந்தார்.

அத்துடன் , இந்த நடைமுறையை கையாள்வதற்காக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, குறித்த காவல் படையினர் நேற்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றிருந்தனர்.

மேலும் காவல் படையின் ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இந்தநிலையில் குறித்த காவல் படையின் சீருடை தமிழீழ விடுதலைப்புலிகளின் காவல் துறை சீருடைகளை ஒத்த சீருடை என பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, யாழ். மாநகர சபை ஆணையாளரை நேற்றைய தினம் இரவு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த பொலிஸார், நீண்ட விசாரணைகளை முன்னெடுத்து சுமார் 3 மணி நேரம் வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளனர்.

அத்துடன் காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறும் அவர்களின் சீருடைகளை தம்மிடம் ஒப்படைக்குமாறும் பொலிஸார் ஆணையாளருக்கு பணித்திருந்தனர்.

அதன்பிரகாரம் காவல் படையின் கடமைகள் இடைநிறுத்தப்பட்டு அவர்களின் சீருடைகளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் மேலதிக விசாரணைகளுக்காக காவல் படையினரின் சீருடைகளை கொழும்புக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ் மாநகர சபையின் காவல் படையினரின் உடைபோன்றே கொழும்பு மாநகர சபையும் தனது காவல் படையினருக்கு வழங்கியுள்ளது.

கொழும்பில் வாகனத் திரிப்பிடங்களில், இந்த நீல நிற உடையோடுதான் காவல்படையினர் காணப்படுகின்றனர்.

ஆகவே விடயத்தை அறிந்துகொள்ளாமல், முகநூலில் சிலர் நாகரீகமின்றிப் பதிவிடுகின்றனர்.

மாநகர முதல்வரின் அரசியல் செயற்பாடு என்பது வேறு. மாநகர விதிமுறைகளைப் பின்பற்றி அதனை உரியமுறையில் செயற்படுத்துவது என்பது இன்னுமொரு வகையானது என பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.