ஆக்சிஜன் பற்றாக்குறை டெல்லி மருத்துவமனையில் 12 கொரோனா நோயாளி பலி: டாக்டரும் உயிரிழந்தார்

புதுடெல்லி: டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்குவதற்கான ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படுவதால், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மூச்சுத் திணறி இறக்கும் சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன. இதற்கு முன், 2 மருத்துவமனைகளில் ஏற்பட்ட தட்டுப்பாட்டால் அடுத்தடுத்த நாட்களில் 50 கொரோனா நோயாளிகள் இறந்தனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள பத்ரா மருத்துவனையிலும் நேற்று இது போன்ற சோக சம்பவம் நடந்தது. இந்த மருத்துவமனையில் 326  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 230 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில், நேற்று இந்த மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் அடுத்த 10 நிமிடங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. அதற்கு முன்பாகவே, 12 மணிக்குள் ஆக்சிஜன் வழங்கும்படி அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டது. ஆனால், 1.35 மணிக்குத்தான் ஆக்சிஜன் டேங்கர் வந்தது. அதற்கு முன்பாகவே, 12 நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தனர். அவர்களில், இந்த மருத்துவமனையில் பணியாற்றி தொற்றுக்கு ஆளாகும் டாக்டரும் அடங்குவார். இதனால், அங்கு பெரும் சோகம் நிலவியது.* திகார் சிறையில் மாஜி எம்பி பலிபீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்பி.யாக இருந்த முகமது சகாபுதீன், இரட்டை கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு திகார் சிறையில், 2004ல் இருந்து ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். அவர், கடந்த மாதம் 20ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். டெல்லி தீன்தயாள் உபாத்யாய் (டிடிஏ) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.* கடும் ஊரடங்கு கட்டாயம் அமெரிக்க நிபுணர் அறிவுரைஅமெரிக்காவின் மூத்த தொற்று நோய் நிபுணரும், அதிபர் பைடனின் மருத்துவ ஆலோசகருமான அந்தோணி பவுசி நேற்று அளித்த பேட்டியில், ‘‘சீனாவில் கொரோனா தொற்று உச்சத்தை எட்டியபோது, நாடு முழுவதும் கடும் ஊரடங்கை அமல்படுத்தப்பட்டது. அதனால், வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. அதேபோல், இந்தியாவில் இப்போது ஏற்பட்டுள்ள தொற்றை கட்டுப்படுத்த, சில வாரங்களாவது கடுமையான ஊரடங்கை பிறப்பிக்க வேண்டும். அப்போதுதான் கொரோனா தொற்றின் சங்கிலி உடைபடும். இதுவே, தற்போது இந்தியா செய்ய வேண்டிய அவசியமான நடவடிக்கை,’’ என்றார். இந்நிலையில், இந்தியாவுக்கு தேவைப்படும் உதவிகளை செய்யும்படி நிபுணர் டேனியல் ஸ்மித்தை பைடன் அனுப்பியுள்ளார். * வெளியுறவு அமைச்சரின் நண்பருக்கே இந்த கதிதான்வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கரின் நெருங்கிய நண்பர் அசோக் அம்ரோஹி. வெளியுறவு பணிகளில் அவருடன் இணைந்து பணியாற்றியவர்  அசோக் அம்ரோஹி 1981ம் ஆண்டு ஐஎப்எஸ் பிரிவை சேர்ந்தவர். புருனே, மொசாம்பிக், அல்ஜீரியா என பல நாடுகளில் இந்தியாவின் தூதராக பணியாற்றி இருக்கிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், டெல்லி அருகே உள்ள குர்காவ்னில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றார். ஆனால், 5 மணி நேரமாக படுக்கை வசதி கிடைக்காமல் வாகன நிறுத்தும் இடத்தில் சித்ரவதையை அனுபவித்தார். அவரால் சுவாசிக்க முடியாமல். அவருக்கு படுக்கை கிடைக்காமலே, வாகன நிறுத்தும் இடத்திலேயே உயிர் போனது. இந்தியாவின் தூதராக பல நாடுகளில் பணியாற்றிய ஐஎப்ஐஎஸ் அதிகாரிக்கே, டெல்லியில் இந்த அவலநிலை உள்ளது. அப்படி என்றால், சாமானியர்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளூங்கள்.* மரணங்களை பார்த்து வேதனை: மன அழுத்தத்தால் டாக்டர் தற்கொலைடெல்லியில் சாகேத்  பகுதியில் உள்ள மாக்ஸ் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றிய இளம்  மருத்துவர் விவேக் ராய். இவர் கடந்த ஒரு மாதமாக ஐசியு கொரோனா பிரிவில் சிகிச்சை அளித்த வந்தார். இந்த வார்டில் தினமும் 5க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதை ஒவ்வொரு நாளும் நேரில் பார்த்து வந்த விவேக் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகி மன அழுத்தத்தில் தவித்தார். இந்நிலையில், நேற்று அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இவர் உத்தர பிரதேசத்தில் உள்ள கோரக்பூரை சேர்ந்தவர். இவருக்கு கடந்தாண்டு நவம்பரில் தான் திருமணம் ஆனது. அவரது மனைவி 2 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.