பொல்லார்ட் மிரட்டல் அடி: கடைசி பந்தில் மும்பை த்ரில் வெற்றி

கைரன் பொல்லார்ட் மிரட்டல் அதிரடியால் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (சனிக்கிழமை) ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது.

219 ரன்கள் என்ற இலக்குடன் மும்பை தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர். ரோஹித் சரியான டைமிங் கிடைக்காமல் திணறினாலும் ரன் எடுத்துக்கொண்டே இருந்தார். டி காக்கும் ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்தார். இதனால், அந்த அணி பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில் 7-வது ஓவரை வீசிய ஷர்துல் தாக்குர், ரோஹித் (35 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்தினார். 

அடுத்த ஓவரில் சூர்யகுமார் யாதவை (3) வீழ்த்தி ஜடேஜா அசத்தினார். 

புதிதாக கிருனாள் பாண்டியா களமிறங்க, இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் என்பதால் மொயீன் அலியைப் பந்துவீச அழைத்தார் தோனி. அதற்குப் பலனாக டி காக் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் ரன் ரேட்டில் சரிவு ஏற்பட்டது.

கடைசி 8 ஓவர்களில் 125 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை இருந்தது.

ஜடேஜா வீசிய 13-வது ஓவரில் கைரன் பொல்லார்ட் 3 சிக்ஸர்கள் அடித்து மிரட்டினார். தொடர்ந்து, என்கிடி வீசிய 14-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், ஷர்துல் வீசிய 15-வது ஓவரில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகள் விளாச மும்பையின் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் குறைந்தது.

இதனால், கடைசி 5 ஓவர்களில் 66 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. அதேசமயம், பொல்லார்டும்  17-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

என்கிடி வீசிய 16-வது ஓவரில் பாண்டியா தன் பங்குக்கு 1 சிக்ஸர், 2 பவுண்டரிகள் விளாச மும்பை வெற்றிக்கு கடைசி 4 ஓவர்களில் 50 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, சாம் கரண் 17-வது ஓவரை வீசினார். அற்புதமாக வீசிய கரண், கிருனாள் பாண்டியா (32 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்தியது மட்டுமில்லாமல் வெறும் 2 ரன்களை மட்டுமே கொடுத்தார்.

கடைசி 3 ஓவர்களில் 48 ரன்கள் தேவை என்ற நிலையில் 18-வது ஓவரை ஷர்துல் வீசினார். பொல்லார்ட் அதில் சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து மிரட்ட, யாரும் எதிர்பார்த்திராத வகையில் பொல்லார்ட் கொடுத்த கேட்ச் வாய்ப்பை டு பிளெஸ்ஸி தவறவிட்டார்.

இதையடுத்து, கடைசி 2 ஓவர்களில் 31 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.

கரண் வீசிய 19-வது ஓவரின் முதல் 2 பந்துகளை ஹார்திக் பாண்டியா சிக்ஸருக்குப் பறக்கவிட்டு மிரட்டினார். ஆனால், 4-வது பந்தில் அவரும் ஆட்டமிழந்தார். டு பிளெஸ்ஸி இந்த முறை கேட்ச்சைத் தவறவிடவில்லை.

அடுத்து களமிறங்கிய ஜேம்ஸ் நீஷம் முதல் பந்தில் ஆட்டமிழக்க கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டன.

என்கிடி வீசிய அந்த ஓவரில் 2 மற்றும் 3-வது பந்தை பவுண்டரிக்கும், 5-வது பந்தை சிக்ஸருக்கும் பறக்கவிட்டார் பொல்லார்ட். கடைசி பந்தில் மும்பை வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டன. என்கிடி யார்க்கராக வீசியபோதிலும் 2 ரன்கள் எடுத்து மும்பை வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பொல்லார்ட் 34 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார். 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.