4 ம் தேதி முதல் இந்தியர்கள் வர தடை!| Dinamalar

வாஷிங்டன் :கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருப்பதால், நாளை மறுதினம் முதல், இந்தியர்கள் அமெரிக்கா வருவதற்கு, அந்த நாட்டு அதிபர் ஜோ பைடன் தடை விதித்துள்ளார். மாணவர் உள்ளிட்ட சில பிரிவினருக்கு, கடும் கட்டுப்பாடுகளுடன் விலக்கு அளிக்கப்படுகிறது. வைரஸ் பரவலை தடுக்க, முழு முடக்கத்தை அமல்படுத்தும்படி, இந்திய அரசுக்கு, அமெரிக்க விஞ்ஞானி அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிக தீவிரமாக உள்ளது. ஆக்சிஜன், மருந்துகள், தடுப்பூசிகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால், அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்கும்படி, தங்கள் நாட்டு குடிமக்களுக்கு, அமெரிக்கா ஏற்கனவே எச்சரித்திருந்தது. இந்நிலையில், நாளை மறுதினத்தில் இருந்து, அமெரிக்கர் அல்லாதோர் இந்தியாவில் இருந்து அமெரிக்கா வருவதற்கு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிபர் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, இந்த நடைமுறை அமலில் இருக்கும்.

புதிய உத்தரவு

புதிய உத்தரவு குறித்து, ஜோ பைடன் கூறியுள்ளதாவது:இந்தியாவில் வைரஸ் பரவல் மிக தீவிரமாக உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் நலனை கருத்தில் வைத்து, இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப் படுகிறது.அதன்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்கர் அல்லாதோர், அமெரிக்கா வருவதற்கு தடைவிதிக்கப்படுகிறது.மாணவர்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் என, வெளியுறவு அமைச்சகத்தால் விலக்கு அளிக்கப்பட்டோருக்கு, இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

அமெரிக்க குடியுரிமை பெற்றோர், கிரீன் கார்டு வைத்துள்ளோர், அவர்களது அமெரிக்க குடியுரிமை பெறாத, கணவர் அல்லது மனைவி, 21 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆகியோருக்கும், இந்த புதிய கட்டுப்பாட்டில் இருந்து விலக்குஅளிக்கப்படுகிறது.இந்தியாவில், 1.87 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உள்ளதாக, உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. உலகெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில், மூன்றில் ஒரு பங்கினர், இந்தியாவில் உள்ளனர். அங்குள்ள சூழ்நிலை குறித்து ஆய்வு செய்து, தடை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.இந்த தடைக்கு, எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின், எம்.பி.,க்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ‘இந்தியாவுக்கு தடை விதிக்கும் அதே நேரத்தில், மெக்சிகோ எல்லை திறந்து விடப்பட்டுள்ளது. ‘கடந்தாண்டு, வெளிநாட்டவர் பயணத்துக்கு தடை விதித்து, அப்போது அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை, ஜோ பைடன் நினைத்து பார்க்க வேண்டும்’ என, அவர்கள் கூறியுள்ளனர்.

அதிகளவில் கொள்முதல்

அமெரிக்க அதிபருக்கு, மருத்துவ துறை தொடர்பான ஆலோசனைகள் வழங்கும், பிரபல தொற்றுநோய் தடுப்பு நிபுணர், டாக்டர் ஆன்டனி பாசி கூறியுள்ளதாவது:வைரஸ் பரவல் தீவிரமாக இருப்பதை குறைப்பதற்கு, இந்தியாவில் முழு முடக்கத்தை உடனடியாக அறிவிப்பது தான் சரியான தீர்வாக இருக்கும். கடந்தாண்டு போல், மாதக்கணக்கில் அறிவிப்பதை யாரும் விரும்பவில்லை. அதனால், குறுகிய காலத்துக்கு முழு முடக்கம் அறிவிக்கலாம்.அதன் வாயிலாக, வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தலாம். மேலும், ஆக்சிஜன், மருந்துகள், தடுப்பூசி உள்ளிட்டவற்றை அதிகளவில் கொள்முதல் செய்ய வேண்டும்.மக்கள் தொகையில், 2 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதனால், அதற்கான தேவை அதிகமாக உள்ளது. அதிகளவில் மருந்துகள் மற்றும் தடுப்பூசி தயாரிக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது; அதை வேகப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

5 ஆண்டு சிறை

ஆஸ்திரேலிய அரசின் அமைச்சரவை கூட்டத்துக்கு பின் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மிக தீவிரமாக உள்ளது. இந்தியாவில் இருந்து, ஆஸ்திரேலியா வந்தவர்கள், 14 நாட்கள் கட்டாயமாக தனிமை மையங்களில் இருக்க வேண்டும். அந்த மையங்களில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.அதனால், அடுத்த 14 நாட்களுக்கு, இந்தியாவில் இருந்த ஆஸ்திரேலியர் உள்ளிட்டோர், ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

இந்த உத்தரவை மீறுவோருக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை அல்லது பெரிய அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தும் விதிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, இந்தியா உள்ளிட்ட, ஐந்து நாடுகளில் இருந்து வருவோர், தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்படுவதாக, ஐரோப்பிய நாடான அயர்லாந்து கூறியுள்ளது. இந்தியா உடனான எல்லையில் உள்ள, 35 நுழைவுப் பாதைகளில், 22 பாதைகளை மூடுவதாக, நம் அண்டை நாடான நேபாளம் கூறியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.