அரசு விருந்தினர் இல்லம் அருகே கார் குண்டு வெடிப்பு – பள்ளி மாணவர்கள் உள்பட 30 பேர் பலி

காபூல்:
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
இந்தப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் தேடி பல நாடுகளுக்கு
அகதிகளாக சென்று உள்ளனர்.
இந்த போரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு பக்கபலமாக இருந்து வரும் அமெரிக்கா முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்லும் இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர
தீவிர முனைப்பு காட்டியது.
அதன் பலனாக அமெரிக்காவுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம்
கையெழுத்தானது.
அந்த ஒப்பந்தத்தில் தலீபான் பயங்கரவாத அமைப்பு அமெரிக்கா மீதும் அதன் நட்பு நாடுகள் மீதும் தாக்குதல் நடக்காமல் இருப்பதற்கு பிரதிபலனாக
ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைகள் 2021-ம் ஆண்டு மே 1-ந் தேதிக்குள் முழுமையாக திரும்பப் பெறப்படும் என அமெரிக்கா உறுதி அளித்தது.
ஆனால் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெறுவது தலீபான்களின் கை மேலும் ஓங்குவதற்கு வழிவகை செய்யும் என சர்வதேச நோக்கர்கள்
எச்சரித்தனர்.
இதற்கிடையில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன், மே 1-ந் தேதிக்குள் அமெரிக்க படைகளை திரும்பப் பெறுவது
சாத்தியமற்றது என அறிவித்தார்.
எனினும் இரட்டை கோபுரத் தாக்குதலின் 20-வது ஆண்டு நினைவு தினமான வருகிற செப்டம்பர் 11-ந் தேதிக்குள் அமெரிக்க படைகள் முழுமையாகத் திரும்பப்
பெறப்படும் என ஜோ பைடன் அண்மையில் அறிவித்தார்.
ஜோ பைடனின் இந்த அறிவிப்பு வெளியானது முதலே ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கின.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள லோகர் மாகாணத்தின் தலைநகர் புல்-இ-ஆலம் நகரில் அரசு விருந்தினர் இல்லம் உள்ளது. இங்கு
உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சுமார் 100 பேர் தங்கியிருந்தனர்.
நேற்று முன்தினம் மாலை இந்த விருந்தினர் இல்லத்துக்கு அருகே பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை நிறுத்தி வெடிக்கச் செய்தனர்.
அவை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. இதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. விருந்தினர் இல்லத்தில் ஒரு பகுதி முற்றிலுமாக இடிந்து விழுந்தது. அருகில் உள்ள
பல கட்டிடங்களில் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. இதில் பலர் இடிபாடுகளில் சிக்கி நசுங்கினர்.
இந்த குண்டு வெடிப்பில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் உள்பட 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 90-க்கும் மேற்பட்டோர் பலத்த
காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு
பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.